×

சென்னை பல்கலையின் 37 வங்கி கணக்குகள் முடக்கம்: பேராசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் சிக்கல்

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாக செலுத்தாததால், அதை வசூலிக்க, பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை பல்கலைக்கழகத்தின் 37 கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், கடந்த 2017-2018 முதல் 2020- 2021 வரையிலான காலகட்டத்தில் ரூ.424 கோடி வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வரியை செலுத்த வருமான வரித்துறை அவகாசம் வழங்கியும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை சார்பில் 3 முறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் 3வது முறையாக வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் உரிய விளக்கம் அளிக்காததால் வருமானவரித்துறை வங்கி கணக்கை முடக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த வங்கி கணக்குகள் மூலம்தான் பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இங்கு பணியாற்றும் 200 பேராசிரியர்கள் மற்றும் 400 பணியாளர்களுக்கு ஊதியமும், 1,400 பேருக்கு ஓய்வூதியமும் இந்த வங்கிக் கணக்குகள் மூலமே வழங்கப்பட்டது. இதுதவிர மின் கட்டணம், வாகன பராமரிப்பு மற்றும் பெட்ரோல் நிரப்புதல் போன்றவைகளுக்கும் மாதம் சுமார் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. தற்போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் இந்த பணபரிவர்த்தனைகள் எதையுமே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி சிக்கலில் தவிக்கும் தமிழகத்தின் பழமையான பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு தகுந்த உதவிகளை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கத்தில், “வரி கட்டாததும், காலதாமதம் ஆனதும் உண்மைதான். இதனால் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். இந்த விவகாரத்தை பொறுத்தவரை பணியாளர்கள், மாணவர்களின் நலன் நிச்சயமாக காக்கப்படும், யாரும் கவலை அடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை பல்கலையின் 37 வங்கி கணக்குகள் முடக்கம்: பேராசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Madras University ,CHENNAI ,Income Tax Department ,University of Chennai ,State ,Bank of India ,University ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...