சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று விடுத்த அறிக்கை: பாஜ ஆட்சியில் கார்ப்பரேட் அதிபர்களிடமிருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி 2018 முதல் 2023 வரை ரூ.13,000 கோடி பெறப்பட்ட மொத்த நன்கொடையில் ரூ.6572 கோடியை பாஜக மட்டும் பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதம் ஆகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக் கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6ம் தேதி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த பட்டியலை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரிய தீர்ப்பாகும். இதை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு அகில இந்திய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையின் மூலம் முடக்கியிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசு வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித்துறை அலுவலகங்கள் இருக்கிறதோ அதற்கு முன்பாக வரும் 19ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்,எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும்.
The post வங்கி கணக்குகள் முடக்கம் கண்டித்து 19ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.