×

வனத்திற்குள் தடையை மீறி சென்று காட்டு யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து காட்டு யானையை காரில் துரத்திய அதிமுக இளைஞரணி நிர்வாகிக்கு வனத்துறை ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள அடர் வனத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்குள்ள ஆழியாரை அடுத்த நவமலை ரோட்டில் கடந்த 15ம் தேதி இரவு பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த அதிமுக இளைஞரணி நிர்வாகி மிதுன் காரில் பாடலை சப்தமாக ஒலித்தவாறு சென்றார்.

அப்போது, காட்டு யானை ஒன்று ரோட்டை கடக்க முயன்றபோது அதிமுக பிரமுகர், காரை நிறுத்தாமல் ஹை பீம் விளக்குகளை ஒளிர செய்து தொடர்ந்து யானையை விரட்டி சென்றார். இதனால் அச்சமடைந்த யானை, மீண்டும் வந்த வழியே வனத்திற்குள் திரும்பி சென்றது. இது தொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த பலரும் மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகவலறிந்த ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி இதுகுறித்து கூறுகையில்,`நவமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் குடியிருப்புக்கும், விவசாய பகுதிக்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பகுதியினர் மட்டுமே சென்று வர அனுமதி உள்ளது. ஆனால் தடைமீறி சென்று காட்டு யானையை காரில் துரத்தி சென்ற மிதுனுக்கு, வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post வனத்திற்குள் தடையை மீறி சென்று காட்டு யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pollachi ,Anaimalai ,Western Ghats ,Coimbatore ,Dinakaran ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...