×

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிய அனுமன் குரங்குகளில் ஒன்று பிடிபட்டது

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி கடந்த 5 நாட்களாக ஆட்டம் காட்டிய 2 அனுமன் குரங்குகளில் ஒரு குரங்கை வனத்துறையினர் பிடித்தனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும், கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 2023-ல் பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது. அதன்படி, 10 அனுமன் குரங்குகள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி அன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், குரங்குகள் அடைக்கப்பட்டு இருந்த கூண்டில் இருந்து கடந்த 13ம் தேதி மதியம் குரங்குகளுக்கு ஊழியர்கள் உணவு வைக்கும் போது 2 அனுமன் குரங்குகள் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூங்கா அதிகாரிகள், ரேஞ்சர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பி ஓடிய குரங்குகளை பூங்கா முழுவதும் வலைவீசி தேடினர். ஆனால் கடந்த 5 நாட்களாக கிடைக்கவில்லை. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியபடி உள்ள வனக்காப்பு காடுகளிலும், இதேபோல் ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, ஓட்டேரி, வண்டலூர் மற்றும் மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் 100 அடி உயரத்தில் உள்ள மரங்களில் தப்பி சென்ற 2 அனுமன் குரங்குகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக ஆட்டம் காட்டி வந்த 2 அனுமன் குரங்குகளில் ஒரு குரங்கை மண்ணிவாக்கத்தில் உள்ள ஒருவரது வீட்டின் மரத்தின் உச்சியில் இருக்கும்போது வனத்துறையினர் நேற்று மதியம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு இன்னும் பிடிப்படவில்லை. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றியுள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாக்ஸ் நியூஸ்: உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

கடந்த 13ம் தேதி குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் தப்பி வெளியே ஓடியது. இதில் அதிகாரிகள் கண்டித்த அதிர்ச்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந் சுகுணா மயங்கி விழுந்து உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்ணா உயிரியல் பூங்கா சங்கத்தினர் நேற்று மதியம் பூங்கா இயக்குனர் சீனிவாச ரெட்டியை நேரில் சந்தித்து உயிரிழந்த சுகுணா குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிய அனுமன் குரங்குகளில் ஒன்று பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Zoo ,Vandalur Arinjar Anna Zoo ,Kanpur Zoo… ,Vandalur Zoo ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்