×

அண்ணன் கொலைக்கு பழியாக 6 பேரை வெட்டிக் கொன்றவர் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாமக்கல்லில் சுற்றிவளைப்பு

* தனிப்படை போலீசார் அதிரடி,

* நீதிமன்றத்தில் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியில் அண்ணன் கொலைக்கு பழி வாங்குவதற்காக 6 பேரை வெட்டிக் கொன்ற பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் நாமக்கல்லில் சுற்றி வளைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது நண்பர்கள், உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(42). இவரது அண்ணன் விஜயகுமார் கடந்த 2012ம் ஆண்டு பி.வி.களத்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். அப்போது மணல் கடத்தும் விவகாரத்தில் விஜயகுமாருக்கு சிலருடன் முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் அவரை ஒரு கும்பல், செங்கல்பட்டு தனியார் வங்கி ஏடிஎம்மில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இந்நிலையில் தனது அண்ணனை கொலைசெய்த நபர்களை கொல்வதுதான் என் கடமை என அண்ணணின் சமாதியில் சுரேஷ்குமார் சபதம் செய்துள்ளார். இதனையடுத்து விஜயகுமார் கொலையில் தொடர்புடைய பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் குப்பன் மற்றும் அவரது மகனும் அதிமுக இளைஞர் அணி நிர்வாகியும், வழக்கறிஞருமான நித்யா ஆகியோரை வெட்டி கொலை செய்தார்.

அதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு பொன்விளைந்த களத்தூர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் துரைதாஸ் என்பவரை வெட்டி கொலை செய்தார். இதற்கிடையில் சந்துரு என்பவரை சென்னையில் வைத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து பி.வி.களத்தூர் செல்லும் வழியில் உள்ள செல்விநகர் பகுதியில் வைத்து பட்டப்பகலில் புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை கொலை செய்தார். இது சம்பந்தமாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தனது அண்ணனை கொலை செய்த வழக்கில் மீதமுள்ள பங்க் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் உமாபதி, ஜேசிபி.ரவி ஆகியோரை கொலை செய்ய உள்ளதாக தகவல் பரவியதால், அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்கள். போலீஸ் விசாரணைக்கும், நீதிமன்ற விசாரணைக்கும் சுரேஷ்குமார் ஆஜராகாமல் இருந்து தொடர்ந்து போலீசுக்கு தண்ணி காட்டி வந்தார். இதனால் அவர் மீதுள்ள கொலை வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்த முடியவில்லை. பலமுறை‌ நீதிமன்றத்தின் முலம் பிடிவாரண்ட் பிறப்பித்தும், போலீசாரால் சுரேஷை பிடிக்க முடியவில்லை. குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்ய உத்தரவிட்டும் பிடிக்க முடியவில்லை.

இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுரேஷை சுட்டு பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீசார் உத்தரவிட்டு, மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். தமிழகம் முழுவதும் உள்ள ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருந்து வருவதால், சுரேஷ்குமாரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்துகொண்டே மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை, வாட்ஸ் ஆப் மூலம் அழைத்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும், நிலங்களை அபகரிப்பதுமாக சுரேஷ்குமார் மீது பலர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், உயர்‌ போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.

அவரை பிடிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் அவர் நாமக்கல் பகுதியில் நீண்ட மாதங்களுக்கு மேலாக பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நாமக்கல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்போடு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அவரை 15 நாள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சுரேஷ்குமார் நீதிமன்றம் வருவதை அறிந்ததும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் குவிந்தனர். அசம்பாவிதம் ஏது நடந்து விடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இதனால் செங்கல்பட்டு பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

* அரசியல் செல்வாக்கு
கடந்த 2012ம் ஆண்டு முதல் பொன்விளைந்த களத்தூர் பகுதியில் தொடர்ந்து பழிக்கு பழி வாங்க 6 கொலைகள் நடந்தது. அந்த கொலைகளையெல்லாம் சுரேஷ்குமார் தான் செய்தார் என தகுந்த சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் தரப்பில் ஊர்ஜிதம் செய்யப்பட்டு சுரேஷ்குமாரை தேடிவந்தனர். தொடர் கொலைகள் நடப்பதால் பொன்விளைந்த களத்தூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்தனர், கிராமம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட்டனர். ஆனாலும் கொலைகள் நடப்பதை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

தேடப்படும் குற்றவாளியாக இருக்கும்போதே, சுரேஷ்குமார் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவரானார். சுரேஷ்குமாரின் அம்மா சின்னம்மா என்பவர் பொன்விளைந்த களத்தூர் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். அரசியல் செல்வாக்கு காரணமாக சுரேஷ்குமாரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறினர். நாமக்கல்லில் கைது செய்யப்பட்டார் என்றதும், அவரை போலீசார் என்கவுன்டர் செய்ய உள்ளதாக நேற்று முன்தினம் முழுவதும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

The post அண்ணன் கொலைக்கு பழியாக 6 பேரை வெட்டிக் கொன்றவர் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாமக்கல்லில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Sengalpattu ,Kalathur ,Chengalpattu ,Namakall ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...