×

ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை (IT Tower) காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளரத் தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) 147.61 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.80.55 கோடி முதலீட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (எல்கோசெஸ்) உருவாக்கியுள்ளது. இதில், 123.23 ஏக்கர் நிலப் பரப்பளவு, சிறப்புப் பொருளாதார மண்டலமாக உள்ளது. இதில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, நிருவாக மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் பொதுப்பணித் துறையின் மூலம் 1,16,064 சதுர அடி பரப்பளவில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை (IT Tower) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்தத் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் மூலம் சுமார் 2800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சிராப்பள்ளியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. ,Trichy ,Stalin ,CHENNAI ,Nawalpatt, Tiruchirappalli district ,M.K. Stalin ,Chief Secretariat ,Department of Information Technology and Digital Services ,Tiruchirappalli ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...