×

சுயத்தை தியாகம் செய்தல் !

கிருஷ்ண அமுதம் – 65 (பகவத்கீதை உரை)
தான் சார்ந்திருப்பவற்றிலிருந்து தன்னைப் பிரித்து இனம் காணாமல், தானும், தான் சார்ந்திருக்கும் அனைத்துமே பிரம்மம்தான் என்ற உணர்வு ஏற்பட்டால், அங்கே சமத்துவம் நிலவும். சரிசமம் உருவாகும். இந்த சமரசத்தை வாழ்நாளில் நாம் காணமுடியாமல் போவது வேதனைதான். நாம் இறந்தபின், இயற்கை அதனை மயானத்தில் அறிவூட்டுகிறது, ஆனால், அதைப் புரிந்துகொள்ள ‘நான்’ இருப்பதில்லை! ஒரு மயான வாயிலில் ‘இன்று இவர், நாளை நீ’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது, இப்போது நினைவுக்கு வருகிறது!

உணவு உண்பதாகிய கர்மத்தை ஒரு ஞானி இயற்றுகிறான் என்றால், அவன் பசியையும் பிரம்மமாகப் பார்க்கிறான். தனக்கு உணவு அளிப்பவரையும் பிரம்மமாகப் பார்க்கிறான். அவர் அளிக்கும் உணவும் அவனைப் பொறுத்தவரை பிரம்மமே. அதை உண்பதும் பிரம்மமே. பசி அடங்குவதாகிய உணர்வும் பிரம்மமே.அதனாலேயே அவனை பசி என்ற உணர்வு பாதிப்பதில்லை. உணவு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, உணவு உண்பதால் புத்துணர்வு பெறுவதோ, இல்லாவிட்டால் களைத்து விடுவதோ அவனுக்கு ஏற்படாது. அவனுக்கு எல்லாமும் பிரம்மமே. செயலாற்றிக் கொண்டிருப்பதுதான் அவனுடைய பணி.

எந்தவகை செயலையும் அவன் பிரம்மமாகவே பாவிப்பதால், அதன் விளைவுகளை அவன் எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த விளைவுகள் எல்லாமும் பிரம்மமே! எல்லாவற்றையும், எல்லாவற்றிலும் பிரம்மத்தையே காணுமாறு கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார்.

தைவமேவாபரே யக்ஞம் யோகின பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்னாவபரே யக்ஞம் யக்ஞேனைவோபஜுஹ்வதி (4:25)
‘‘யோகிகள் தேவதைகளை திருப்தி

படுத்துவதற்காக யக்ஞம் (யாகம்) இயற்றுகிறார்கள். ஆனால் ஞானிகளோ, பிரம்மமாகிய அக்னியில் யக்ஞத்தின் மூலமாக யக்ஞத்தையே ஹோமமாகச் செய்கிறார்கள்.’’ ஹோமம் வளர்த்தலை ஒரு கர்மாவாக இயற்றுகிறான் ஞானி. இப்படி ஹோமம் வளர்த்தலால் எந்தவித பயனையும் அவன் எதிர்பார்ப்பதில்லை. மழை வேண்டி, தீவினைகள் அழிய வேண்டி, நல்லன பெருக வேண்டி அல்லது கோயில் கும்பாபிஷேகம் முதலான சிறப்பு நிகழ்ச்சிகள் நன்கு நடந்தேற வேண்டி… இப்படி எத்தனையோ காரணங்களுக்காக யாகம் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு ஞானி இயற்றுவது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல்தான்.

ஹோமம் இயற்ற வேண்டியது அவனுடைய கடமை. அதாவது ஒரு பிரம்மமாய், பிரம்மத்தை இயற்றுகிறான் அவன்! ஹோமத்தீ என்ற பிரம்மத்தில் அவன் ஆஹுதிப் பொருட்கள் என்ற பிரம்மத்தை இடுகிறான். ஹோம நிறைவில் அவன் தன் ஆன்மாவையே தீக்கு அர்ப்பணிக்கிறான். அந்தத் தீயிலிருந்து எழுந்து வந்து அவிர்பாகம் கொடுக்கும் தேவதையையும், அவன்
பிரம்மமாகவே கருதுகிறான்.

ஆழ்ந்து சிந்தித்தோமானால், ஹோமம் அல்லது யாகத்தில் இடப்படும் பொருட்கள் எல்லாமே சுயத்தை தியாகம் செய்யக் கூடியதாகவே மறைமுகமாகக் குறிக்கின்றன. ஏனென்றால், அக்னியின் தன்மை அத்தகையது. தன்னில் இடப்படும் எந்தப் பொருளையும் பஸ்மமாக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. தங்கத்தையே இட்டாலும், அதையும் உருக்கி அதனுள் இருக்கக்கூடிய அழுக்கையும் அது பொசுக்கிவிடுகிறது.

ஒரு ஞானி, அக்னியை பிரம்மமாகக் கருதுவதன் அடிப்படைக் காரணமே அந்த சக்தி எங்கெங்கும் நிறைந்திருக்கிறது என்பதுதான். ஏனென்றால், பஞ்சபூதங்களில் பிற நான்கும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளில் எச்சம், மிச்சம் என்று ஏதாவது இருக்கும். ஆனால், அக்னியின் பாதிப்பு நிரந்தர இல்லாமைக்குதான் வழி வகுக்கும். இந்த வகையில், அக்னியின் சக்தி அளப்பரியது. அதனால்தான் இந்த அக்னியை மூலமாக வைத்து யாகங்கள் இயற்றப்படுகின்றன.

அக்னியில் இடப்படும் தானியங்கள், புடவை போன்றவையெல்லாம் வெறும் பொருட்கள் அல்ல. அவை அதுவரை நம்மிடம் இருந்த, நமக்குரியது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த பொருட்கள். அவற்றை நாம் அக்னியிலிட்டு தியாகம் செய்கிறோம். அவை நமக்கு வேண்டாம் என்று ஒதுக்கிவிடுகிறோம். அதாவது, இன்னொரு கோணத்தில் நம்முடைய அகங்காரம், பொறாமை, கோபம், அசூயை, காமம், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற பல தீயகுணங்களை அத்தீயில் இட்டுப் பொசுக்குகிறோம். பொருட்களை இந்த நம் துர்க்குணங்களாக பாவித்து அக்னிக்கு அர்ப்பணிக்கிறோம்.

இதில் இன்னொரு வேடிக்கையையும் நாம் பார்க்கலாம். அக்னியில் இடப்படும் பொருட்கள் எல்லாம் கரைந்து சாம்பலாகி விட, நெய் மட்டும் அந்த அக்னி ஜ்வாலையை வளர்க்கிறது. நெய்யின் இந்த செய்கை சொல்வது என்ன? தீயவை அழிய வேண்டும், நல்லவை வளர வேண்டும். அந்த நல்லவை, தீயவற்றை அழிக்கும் வஸ்துவுக்குத் துணைபோகின்றன. இவ்வாறு நெய் வளர்க்கும் தீ, நாக்குகள் மேலே மேலே முயற்சித்து எழும்பி, தன்னில் இடப்படும் பொருட்களையெல்லாம் பேராவலுடன் பொசுக்குகிறது.

நெய்யை நல்லனவற்றிற்கு ஒப்பிடுவதில் ஒரு காரணம் இருக்கிறது. நெய்யை நம்மால் நேரடியாகப் பெற்றுவிட முடியாது. முதலில் பால், அது தயிராகிறது. அந்தத் தயிர் கடையப்படுகிறது. வெண்ணெய் திரள்கிறது, வெண்ணெய் உருக்கப்படுகிறது, நெய் கிடைக்கிறது. அதாவது, நல்லது என்பது உடனே கிட்டிவிடுவதில்லை; அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் கிட்டுகிறது. அளவும் குறைவு. ஆமாம், பாலின் அளவையும், அது நெய்யாக மாறிய பின் இதன் அளவையும் ஒப்பிட்டால், நெய் வெகு குறைவாக இருக்கும்.

நல்லது என்பது, இப்படி மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகு சொற்பமாகக் கிடைக்கும் நெய் போன்றதுதான். இதுபோன்ற ஹோமத்தில் கலந்து கொள்பவர்கள் ஓங்கி வளரும் அக்னி ஜ்வாலையைக் காணும்போது, அவர்கள் மனம் தானாக சுத்தமடைவதை உணர முடியும். ஒவ்வொரு பொருளாக அக்னியில் விழும்போது, அவையெல்லாம் நம் தீய குணங்கள் என்ற மானசீக உணர்வு கொண்டோமானால் நம் மனம் எளிதில் சுத்தமடைந்துவிடுகிறது. இறையருளின் தன்மையே அதுதான்.

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம், ‘‘இறைவனிடம் பிரார்த்தனை செய்வதால் என்ன லாபம்?’’ என்று ஒருவர் கேட்டார்.‘‘என்னைப் பொறுத்தவரை லாபம் இல்லை, நஷ்டம்தான்,’’ என்றார் சுவாமி.கேட்டவர் திடுக்கிட்டார். ‘‘நஷ்டமா, எந்த வகையில்?’’‘‘நான் தினமும் பிரார்த்தனையை மேற்கொள்வதால், என்னைவிட்டு கோபம், வெறுப்பு முதலான தீயகுணங்கள் எல்லாம் விலகிவிடுகின்றன.

இப்படி, என்னிடமிருந்தவை என்னை விட்டு நீங்குவதால், அது எனக்கு நஷ்டம்தானே?’’ என்று சிரித்தபடி பதிலளித்தார் சுவாமி. பகவான் கிருஷ்ணனும் இதைத்தான் அறிவுறுத்துகிறார். ‘உன் வாழ்க்கையே ஒரு யக்ஞம்தான். அதை ஒருநாளும் தவறாமல் நீ இயற்றுவாயானால், உன் வாழ்க்கையே அதில் இடப்படும் ஆஹுதியாகும். அப்புறம் என்ன, நீ புடம்போட்ட தங்கமாகிவிடுவாய் அதாவது, சுயம் விலகிவிட்ட பரிசுத்த ஆன்மாவாவாய்,’ என்கிறார்.

ச்ரோத்ரதீனீந்த்ரியாண்யன்யே ஸம்யமாக்னிஷு ஜூஹ்வதி
சப்தாதீன்விஷயானன்ய இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி (4:26)

‘‘இந்திரியங்களைப் பொறுத்தவரை அக்னிக்கு ஆஹுதியாக்குவதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, அந்த இந்திரியங்களையே புலனடக்கம் என்ற அக்னிக்கு ஆஹுதியாக்குவது; இன்னொன்று, இந்திரியங்கள் ஈர்க்கும் விஷயங்களை அந்த இந்திரியங்கள் என்ற அக்னிக்கு ஆஹுதியாக்குவது!’’உடல் இயங்குவதற்கான அவசியத் தேவைக்காகத்தான் ஐம்புலன்களையும் இறைவன் படைத்திருக்கிறான். அதேசமயம், அவற்றை முறைப்படுத்தவும், கையாளவும் நம்மையே பொறுப்பாளியாக்கியும் உள்ளான்.

நம் உடல் என்றால், அதன் எல்லா விஷயங்களுக்கும் நாம்தானே பொறுப்பு மேற்கொள்ளவேண்டும்! அதன் வளர்ச்சி – தளர்ச்சி, நலன் – கேடு, மேன்மை – இகழ்ச்சி, பலம் – பலவீனம் என இந்த ஆக்கபூர்வ – அழிவுபூர்வ விஷயங்களுக்கு நம் இந்திரியங்களே அடிப்படை காரணம், அவற்றை முறையாக இயக்கத் தெரியாத ‘நாம்’ அடுத்த காரணம்!

எந்த விஷயத்தாலும் உடனே ஈர்க்கப்படுபவை நம் புலன்கள்தான். அவ்வாறு ஈர்க்கப்படாவிட்டால் நாம், நாமல்ல; ‘அது’தான்! ஆனால், அப்படி ஈர்க்கப்பட்டாலும், அவற்றை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, அடுத்து அவை எதனாலும் ஈர்க்கப் பட்டுவிடாத வகையில் கட்டுப்படுத்தி வைப்பது ஒருவகை. இதுதான் இந்திரியங் களையே புலனடக்கம் என்னும் அக்னிக்கு
ஆஹுதியாக்குவது.

அதே சமயம், பலவிஷயங்களில் புலன்கள் ஈர்க்கப்பட்டாலும், அந்த விஷயங் களால் எந்த பாதிப்பும் அடையாமல் தன்னைக் காத்துக் கொள்வது இரண்டாவது வகை. அதாவது இந்திரியங்களையே அக்னியாக பாவித்து அவற்றிற்கே அவை ஈர்க்கும் விஷயங்களை ஆஹுதியாக்குவது! புலனடக்கமும் அக்னி; புலன்களும் அக்னி! புலன்களை அடக்கும் ஆற்றல் பெற்றவர்கள் அவற்றை எந்த விஷயமும் ஈர்த்துவிடாமல் பார்த்துக்கொள்வார்கள்.

கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கும், ஆனால், விழித்திரையில் எந்தக் காட்சியும் பதிவாகாது; காது கேட்டுக் கொண்டுதான் இருக்கும், ஆனால் கேட்பவை மூளைக்குச் செல்லாது; வாய் பேசிக்கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோதான் இருக்கும், ஆனால், பேச்சில் உணர்ச்சி வசப்படுதலோ, சாப்பாட்டில் சுவை அறிதலோ இருக்காது; மூக்கு சுவாசித்துக் கொண்டுதான் இருக்கும், ஆனால், எந்த வாசனையையும் உணராது; மேனி, ஸ்பரிசம் காணும். ஆனால், சிலிர்த்துக் கொள்ளாது.

இதுதான் புலனடக்கம் என்ற அக்னிக்கு அவை ஈர்க்கும் விஷயங்களையே அர்ப்பணித்துவிடுவது! அதாவது, காண்பது, கேட்பது, நுகர்வது, புசிப்பது, பேசுவது, ஸ்பரிசிப்பது எல்லாவற்றையுமே பரந்தாமன் ஸ்மரணையாக பாவிப்பது! இந்த வகையில், கண் கேட்கும், வாய் நுகரும், மூக்கு பேசும், காது பார்க்கும் என்ற விசித்திரமான அனுபவமும் ஏற்படும்.  அதாவது, இந்திரிய உணர்வுகள் எல்லாம் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டுவிடும். முரண்பாடான கருத்துதான். ஆனால், ஒன்றுமே இல்லை அல்லது எல்லாமே ஒன்றுதான் என்னும்போது, முரண்பாட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது? இது முதல் வகை.

ஈர்க்கும் விஷயங்களுக்குப் புலன்களை ஈடுபடுத்துவது. அவற்றின் அந்தந்தக் கடமை களைச் செய்ய அனுமதிப்பது; ஆனால், அந்த ஈர்ப்பால் அந்தப் புலன்களுக்கும் சரி, ‘தனக்கும்’ சரி, எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு காத்துக்கொள்வது. அதாவது, புலன்கள் என்ற அக்னிக்கு அவை ஈர்க்கும் விஷயங்களையே அர்ப்பணித்துவிடுவது! பார்ப்பதெல்லாம் பரந்தாமன் வடிவம், கேட்பதெல்லாம் அவன் நாமம், பேசுவதெல்லாம் அவன் பெருமை, சுவைப்பதெல்லாம் அவன் கருணை, நுகர்வதெல்லாம் அவன் நறுமணம் என்று புலன் இயக்கங்களையெல்லாம் அவனுடைய பலன்களாக பாவிக்கும்போது, புலன்கள் எந்த விஷயத்தில் ஈர்ப்பு கொண்டால்தான் என்ன? இது இரண்டாவது வகை.

இந்திரியங்கள் அனுபவிப்பதையெல்லாம் மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் இந்திரியங்களின் கடமைகள் நிறைவுக்கு வரும். பார்ப்பதை அழகு என்றோ, அழகு இல்லை என்றோ மனம் ஸ்பரிசிக்கும்
போதுதான் கண்களின் கடமை ஈடேறுகிறது. நுகர்வதை நறுமணம் என்றோ, துர்நாற்றம் என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் மூக்கின் கடமை நிறைவேறுகிறது. கேட்பதை இனிமை என்றோ, சகிக்கவில்லை என்றோ மனம் ஸ்பரிசிக்கும் போதுதான் காதுகளின் கடமை பூர்த்தியாகிறது.

ருசிப்பதை சுவையானது என்றோ, சுவையற்றது என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான், பேசுவதை இனிமையானது என்றோ, இனிமையற்றது என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் வாயின் கடமை முழுமையடைகிறது. மேனியால் தொடும்போது அல்லது மேனி தொடப்படும்போது சுகம் என்றோ, வலி என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் மேனியின் கடமை நிறைவேறுகிறது.

ஆனால், அதே மனம், இந்திரியங்களின் அனைத்து உணர்வுகளையும் பரந்தாமனின் சுவைகளாகவே ஸ்பரிசிக்குமானால், அது இந்திரியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மனதின் இந்த ஸ்பரிசமே, அது எந்த அளவுக்கு ஆழ்ந்து ஸ்பரிசிக்கிறதோ அதைப் பொறுத்தே, அந்தந்த உணர்வுகளைப் பற்றிய நீடித்த நினைவாகவோ அல்லது நினைவுத் தப்புதலோ ஏற்படுகிறது.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post சுயத்தை தியாகம் செய்தல் ! appeared first on Dinakaran.

Tags : Krishna ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...