அருமனை : இடைக்கோடு அருகே நேற்று காலை சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.அருமனை அருகே மேல்புறம் முதல் மேல்பாலை செல்லும் பிரதான சாலையில் இடைக்கோடு பகுதியில் கல்லுப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று காலை 6 மணியளவில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று அந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் கல்லுப்பாலம் அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்று விட்டார்.
அப்போது அந்த லாரி நின்ற சாலைப்பகுதி திடீரென பிளவுபட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் சாலையில் விரிசல் அதிகமாகி பெயர்ந்து விழுந்தது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரியும் அருகில் உள்ள தோட்டத்திற்குள் குப்புற கவிழ்ந்தது.கண்ணெதிரே லாரி கவிழ்ந்ததை கண்டதும் டிரைவர் ஓடி வந்தார். அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூடி விட்டது. சாலையின் ஒரு பகுதி முழுவதும் நிலநடுக்கம் வந்ததுபோல பிளவுபட்டு ராட்சத பள்ளம் உருவானது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சேதமடையாத சாலை வழியாக மெதுவாக சென்றனர். சாலையின் மறுபகுதியும் பிளவுபட்டு பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் பீதியிலேயே ஓட்டி சென்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜல்லி கற்களை சாலைப்பணிக்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.
ஆனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, அப்படி சாலைப்பணிகள் எதுவும் அங்கு நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர். எனவே சட்ட விரோதமாக கனிமவளம் கடத்தப்படுகிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரியின் பாரம் தாங்காமல் சாலையில் பிளவு ஏற்பட்டதா? அல்லது சாலை பராமரிப்பு பணிகள் இல்லாததால் சேதமடைந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இடைக்கோடு அருகே சாலையில் திடீர் விரிசல்:டாரஸ் லாரி கவிழ்ந்தது appeared first on Dinakaran.