×

மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 52,650 பேரின் கோரிக்கைகளுக்கு தீர்வு

*கலெக்டர் தகவல்

கோவை : மக்களுடன் முதல்வர் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 52,650 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.இதன் ஒரு பகுதியாக கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3,466 பயனாளிகளுக்கு ரூ.127.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த டிசம்பர் 18ம் தேதி மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,நகராட்சி நிர்வாகத்துறை உள்பட 13 அரசு துறைகள் சார்ந்த பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான 19,786 மனுக்களும், இதர கோரிக்கைக்களுக்கான 54,277 மனுக்களும் பெறப்பட்டது.

இதற்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற இணைய வழியில் 74,063 பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்களில் 52,650 மனுக்கள் ஏற்கப்பட்டு பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி 6ம் தேதி வரை ஒவ்வொரு முகாமிற்கும் துணை ஆட்சியர் நிலையில் பொறுப்பு அலுவலரை நியமனம் செய்து மொத்தம் 16 நாட்கள் மாநகராட்சியில் 68 முகாம்கள், நகராட்சியில் 27 முகாம்கள் பேரூராட்சியில் 32 முகாம்கள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 10 முகாம்கள் என மொத்தம் 137 முகாம்கள் நடத்தப்பட்டது.

இம்முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மூலமாக மக்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், அரசு நலத்திட்ட உதவிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, 3,466 பயனாளிகளுக்கு ரூ.127.06 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் 24 மணி நேரம் அந்த பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பிரச்னைகளை அறிந்து கொண்டு, அதற்கான தீர்வை காண வேண்டும். மக்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளாக இருந்தாலும் அது அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சில பொதுமக்கள் வந்து அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டியது உள்ளது. எங்களிடம் காப்பீட்டு அட்டைகள் இல்லை. தயவு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.

எனவே, கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முகாம்கள் நாள் தோறும் நடத்தப்பட்டது. இம்முகாம் மூலம் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் பயனடைவர். தகுதியுள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், தனித்துணை ஆட்சியர் சுரேஷ் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட காப்பீட்டு திட்டம் திட்ட அலுவலர் பாண்டியராஜன், பேரூர் வட்டாட்சியர் ஜோதிபாசு, கவுன்சிலர்கள் கார்த்திகேயன்,பாபு,செந்தில்குமார்,முருகேசன்,ராஜேந்திரன்,இளஞ்சேகரன்,அஸ்லாம் பாட்ஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.127 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மாவட்ட தொழில் மையம் சார்பில் 103 பயனாளிகளுக்கு ரூ.11.76 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 107 பயனாளிகளுக்கு ரூ.99.05 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.98.75 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ.41.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும்,பேரூராட்சிகள் துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 7 பயனாளிக்கு ரூ..22.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.16.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

இதே போல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 172 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 148 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2250 பயனாளிக்கு ரூ.112 கோடி மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், மாநகராட்சி சார்பில் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 3,466 பயனாளிகளுக்கு ரூ.127.06 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

The post மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 52,650 பேரின் கோரிக்கைகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Collector ,Granthi Kumar Badi ,Coimbatore ,Chennai ,Kalaiwanar Arangam ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...