×
Saravana Stores

குந்தா மின்வாரியத்தில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

மஞ்சூர் : ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து குந்தா மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல்முகாமில் உள்ள குந்தா புனல் உற்பத்தி வட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதன் ஒரு பகுதியாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் செயலாளர் ரைசின், துணை செயலாளர்கள் பிரகாஷ்பாபு, ஐஎன்டியுசி பொறுப்பாளர் கலையரசி அம்பேத்கர் தொழிலாளர் சங்க நிர்வாகி கதிரவன், சிஐடியு பொருப்பாளர்கள் லட்சுமி, வனஜா, ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அமைப்பு (சிஐடியு) செயலாளர் முரளிதரன் வேலை நிறுத்தத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து மின் மசோதா 2022ஐ கைவிட வேண்டும். மின்சார உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்கும் அனுமதி மற்றும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். திருத்திய 44 தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுதிகளாக கார்ப்பரேட் உரிமையாளர்களுக்கு ஆதரவாக மாற்றம் செய்த தொழிலாளர் நலச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி விவசாய விளைப்பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், மஞ்சூர் பஜாரில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அலியார், மாதேவன், மின்வாரிய மத்திய அமைப்பு செயலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பம்ப் ஆபரேட்டர் மற்றும் குடிநீர், துப்புரவு பணியாளர்கள் சங்க செயலாளர் ரகுநாதன் கோரிக்கை குறித்து பேசினார். இதை தொடர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கிராமபுற வேலை உறுதி சட்டத்தின்படி ஆண்டுக்கு 200 நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த நில உரிமைச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நாகேந்திரன், சுந்தரன், சங்கரதேவன், மணி, மணிகண்டன், தாசபிரகாஷ், மஞ்சூளா, ஜோதி, செல்வி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post குந்தா மின்வாரியத்தில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Union ,Kunta ,Power Board ,Manjoor ,Kunda ,Union government ,Gunda Funnel Production Circle ,Manjoor Melmugam, Nilgiris District ,Gunda Power ,Board ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத்தில் கனரக லாரி மோதி மின் வாரிய ஊழியர் பலி