×

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகல்

ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகியுள்ளார். குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் விலகினார். கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், அஷ்வினுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இந்திய அணியின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “குடும்ப அவசரம் காரணமாக இந்திய – இங்கிலாந்து 3வது டெஸ்டில் இருந்து ஆர் அஸ்வின் விலகினார். இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கும்” என தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் அவர் பாதியிலேயே விலகி இருப்பதால் இந்திய அணி முக்கிய பவுலர் இல்லாமல் விளையாடவுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

The post ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகல் appeared first on Dinakaran.

Tags : Aswin ,England ,Rajkot ,Ashwin ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி