×

கொளத்தூரில் அண்ணாமலை நிகழ்ச்சி காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற பாஜ நிர்வாகி கைது

பெரம்பூர்: கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடைபெற்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியின் போது காவல் ஆய்வாளரை அடிக்க பாய்ந்த பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் அகரம் சந்திப்பில், பாஜ தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில், பாஜவை சேர்ந்த சிலர் தாரை தப்பட்டை மேளங்கள் அடித்துக் கொண்டு அவ்வழியாக செல்பவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அண்ணாமலை நிகழ்ச்சி முடித்து விட்டு சென்ற பிறகும் தொடர்ந்து அவர்கள் மேளம் அடித்து நடனமாடிக் கொண்டு, விதிமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் போலீசார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது பாஜவை சேர்ந்த ரவிச்சந்திரன் (எ) ரவி (50) என்ற நபர், அங்கு பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் கணேஷ்குமார் (31) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணேஷ் குமார் சாலையின் நடுவே நின்று மேளம் அடிக்காதீர்கள், பொதுமக்களுக்கு வழிவிட்டு ஓரமாக நில்லுங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு ரவி, கணேஷ் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லிவாக்கம் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ரவியை கலைந்து போகும் படி கூறியுள்ளார். ஆனால் ரவி, ஆய்வாளரை பார்த்து நான் யார் என்று தெரியுமா நான் தாண்டா ரவி எனது பெயரை கேட்டாலே பெரம்பூரே நடுங்கும் என ஒருமையில் பேசி, ஆய்வாளரை அடிக்க பாய்ந்துள்ளார். போலீசார் அவரை தடுத்து எச்சரித்ததால், ரவி அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து காவலர் கணேஷ்குமார் செம்பியம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சென்னை வெற்றி நகர் திருவேங்கடம் தெரு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனை நேற்று கைது செய்தனர். இவர் பாஜவில் நிர்வாகியாகவும், அனைத்து இந்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொளத்தூரில் அண்ணாமலை நிகழ்ச்சி காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Kolathur ,Perambur ,Kolathur Akaram ,Annamalai ,
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...