×

நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கற்களை அகற்றக் கோரி லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம்

திருவொற்றியூர்: நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கற்களை அகற்றக் கோரி மணலி புதுநகரில் கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்திற்கு கன்டெய்னர் பெட்டிகளை எடுத்து எடுத்துச் செல்ல தினமும் 2000க்கும் மேற்பட்ட டிரைலர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மீஞ்சூரில் இருந்து பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவுச் சாலை பகுதிகள் வழியாக துறைமுகத்துக்கு சென்று வரக்கூடிய டிரைலர் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லாரிகள் செல்வதற்காக தற்போது உள்ள சாலையில் போக்குவரத்து துறை சார்பில் வரிசையாக கற்களை அமைத்து தனிவழியை ஏற்படுத்தி, அதை ஆவடி காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், இதில் கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கான தற்காலிக தடுப்பு கற்களை வைத்திருப்பதால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும் கூறி இந்த கற்களை அகற்ற கோரியும், அதேபோன்று ஆன்லைனில் வழக்குப்பதிவதை நிறுத்தக் கோரியும் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேற்று மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர்கள் வீரக்குமார், ராஜா ராபர்ட், மகிமை வீரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஆவடி காவல் ஆணையரிடம் இதுகுறித்து தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கற்களை அகற்றக் கோரி லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Manali Pudunagar ,Chennai ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பொது...