×

வியாசர்பாடியில் லாரியை கடத்தி சென்ற வழக்கில் 250 சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 6 பேர் கைது: லாரியை மீட்க போலீசார் தென்காசி விரைந்தனர்

பெரம்பூர்: வியாசர்பாடியில் லாரியை கடத்திய வழக்கில் 250 சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், சென்னை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (34). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது லாரியை அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு 9:00 மணிக்கு லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதுகுறித்து பார்த்தசாரதி எம்கேபி நகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, லாரி மூலக்கடை வழியாக செங்குன்றம் நோக்கி செல்வது தெரிய வந்தது.

இதனையடுத்து ஒவ்வொரு சிசிடிவியாக அடுத்தடுத்து லாரி சென்ற இடங்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்த போது, லாரி ஆந்திர மாநிலம் தடா வரை சென்றது தெரிய வந்தது. இதில் 250 கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் லாரி நின்று அங்கிருந்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அந்த பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் காரனோடை அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் (எ) எபின் இன்பராஜ் (51) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.அதில் சம்பவத்தன்று அகஸ்டின், அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியில் நின்றிருந்த பார்த்தசாரதிக்கு சொந்தமான லாரியை திருடி அகஸ்டினுக்கு ஏற்கனவே சிறையில் பழக்கமான தூத்துக்குடியைச் சேர்ந்த புரோக்கர் பாரதிராஜா என்பவருக்கு தொலைபேசி மூலம் லாரியை விற்று தருமாறு கூறியுள்ளார். பாரதிராஜா அவருக்கு நன்கு பழக்கமான ஆலபாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை தொடர்பு கொண்டு லாரியை விற்று தருமாறு கூறியுள்ளார். விஜயகுமார் திருச்சியை சேர்ந்த முகமது பூட்டேவிடம் லாரியை கொண்டுபோய் கொடுக்கும் படி தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு புரோக்கரான சுரேஷ் ராஜன் மற்றும் அகஸ்டின் இருவரும் சேர்ந்து, திருடிய லாரியை கடந்த 9ம் தேதி சோழபுரத்தில் இருந்து திருச்சி கொண்டு சென்று முகமது பூட்டேவிடம் ஒப்படைத்துள்ளனர்.ரூ.2 லட்சம் விலை பேசி 1 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக் கொண்டு வந்து விட்டதாக அகஸ்டின் தெரிவித்துள்ளார். இதனால் அகஸ்டினை வைத்தே போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாரதிராஜா (35), சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் (58), விஜயகுமார் (35) மற்றும் திருச்சி ஆழ்வார் நகர் பகுதியை சேர்ந்த முகமது பூட்டோ (36) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். திருடப்பட்ட லாரியை முகமது பூட்டோ தற்போது தென்காசியை சேர்ந்த ஒரு நபருக்கு விற்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து எம்கேபி நகர் போலீசார் தென்காசி பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

The post வியாசர்பாடியில் லாரியை கடத்தி சென்ற வழக்கில் 250 சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 6 பேர் கைது: லாரியை மீட்க போலீசார் தென்காசி விரைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Tenkasi ,Perambur ,Chennai ,Trichy ,Thoothukudi ,Parthasarathy ,Vyasarpadi Pallatheru ,Dinakaran ,
× RELATED வியாசர்பாடியில் சிறுவனுக்கு கத்திவெட்டு