×

தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தம் 10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்: 2024-25 கல்வியாண்டு முதல் அமல், பள்ளி கல்வித்துறை அரசாணை

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்ப மொழிப் பாடத்தில் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம் எனவும், இனி இந்த மதிப்பெண் தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற பாடப்பிரிவுகளை கொண்டு தலா 100 மதிப்பெண் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதுதவிர தாய்மொழியை விருப்ப பாடங்களாக தேர்வு செய்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விருப்ப மொழிப் பாடத்துக்கான தேர்வும் நடத்தப்படுகிறது.

ஆனால், இந்த பாடத்துக்கான தேர்வு மதிப்பெண் வெளியிடப்படுவது இல்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வைப் பொறுத்தவரை, பொதுத்தேர்வு அறிமுகம் செய்ததிலிருந்து தற்போது வரை 5 பாடங்கள் தான். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முறையே 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு 500 மதிப்பெண்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. தமிழ் அல்லாமல் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படிக்காமலேயே உயர்கல்விக்கு சென்று விடுகிறார்கள் என்றும், எனவே பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் எனவும், தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்ற அடிப்படையில் அந்த சட்டத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார்.

இதை தொடர்ந்து விருப்ப பாடங்களை தேர்ந்தெடுத்தவர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர்களின் விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, 2023-24ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பகுதி-4ல் விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கருத்தில் கொள்ளப்படும்.

பிற பாடங்களில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை போல, இதற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 6 பாடங்களில் குறைந்தபட்சமாக 35 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் மதிப்பெண்கள் சான்றிதழ்களில் குறிப்பிடலாம். இந்த நடைமுறை வருகிற 2024-25ம் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விருப்ப மொழிப் பாடத்தை தேர்ந்தெடுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை எழுதக்கூடிய மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப் பாடம் என தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு கணக்கில் கொள்ளப்படும்.
விருப்ப மொழிப் பாடத்தை தேர்வு செய்யாதவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற அடிப்படையில் தலா 100 மதிப்பெண் வீதம் 500 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

The post தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தம் 10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்: 2024-25 கல்வியாண்டு முதல் அமல், பள்ளி கல்வித்துறை அரசாணை appeared first on Dinakaran.

Tags : Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...