×

மாமல்லபுரத்தில் மாணவர் காவல் படை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: மாணவ – மாணவிகள் பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மாணவர் காவல் படை சார்பில், மாணவ – மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர் காவல் படையில் 44 மாணவர்கள் உள்ளனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுந்தரம், மாணவர் காவல் படையில் உள்ள மாணவர்களை மூலம் போதைப்பொருள் தீமைகள் மற்றும் விற்பனைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்தார்.

அதற்காக, பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 61 மாணவ – மாணவிகளை ஒருங்கிணைத்து, ஒரு பஸ்சில் நேற்று மாமல்லபுரம் அழைத்து வந்தார். இதையடுத்து, புராதன சின்னமான ஐந்து ரதம் பகுதியில் மாணவர் காவல் படை சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இப்பேரணியை, தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் தொடங்கி வைத்தார். ஐந்து ரதம் பகுதியில் தொடங்கிய பேரணி அண்ணா நகர் சாலை, கலங்கரை விளக்க சாலை, மேற்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கிழக்கு ராஜவீதி, கடற்கரை செல்லும் சாலை வழியாக வந்து கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே நிறைவு பெற்றது.

அப்போது, மாணவ – மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தி, ஒழிப்போம் ஒழிப்போம் போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களை ஒழிப்போம். குடிக்காதே குடிக்காதே மதுவை குடிக்காதே, புடிக்காதே புடிக்காதே சிகரெட்டை புடிக்காதே என கோஷம் எழுப்பியவாறு நடந்து சென்றனர். தொடர்ந்து, மாணவ – மாணவிகள் மாமல்லபுரம் காவல் நிலையம், தீயணைப்புத்துறை அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அப்போது, பெண் போலீஸ் ஜெயமாலதி என்பவர் தெரியாத நபர்கள் சாக்லெட் கொடுத்தால் வாங்கி சாப்பிட கூடாது. போதைப்பொருள் விற்பதை கண்டால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்டவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், சரியான மற்றும் தவறான தொடுதல் குறித்தும் தெளிவாக விளக்கிக்கூறினார். தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ரமேஷ் பாபு தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது. தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிப்பது குறித்தும் மாணவ – மாணவிகளுக்கு விளக்கினார். இந்நிகழ்வின்போது, அறிவியல் ஆசிரியரும், மாணவர் காவல் ஒருங்கிணைப்பாளருமான நித்யா, ஆசிரியர் செயலரும், கணித ஆசிரியருமான செந்தில்குமார், மாணவ – மாணவிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் மாணவர் காவல் படை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: மாணவ – மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Anti-Drug Awareness Rally ,Student Police Force ,Mamallapuram ,Kulippanthandalam ,Anti-drug ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...