×

திருவள்ளூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550 க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளன. இதில் 3 ஆயிரம் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் இணைப்பு கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தி இருக்கிறார்களா என நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் அவ்வப்போது ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்துவதுடன், நோட்டிஸ் வழங்கியும் எச்சரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர், சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம் தொழில்வரி மற்றும் காலி மனை வரி ஆகியவை மூலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.17.05 கோடி அளவிற்கு நகராட்சி நிதி ஆதாரமாக உள்ளது. நகராட்சியில் வசூலாகும் தொகையில் 50 சதவீதம் நகராட்சி ஊழியர்களின் சம்பளம் மின் கட்டணம் அலுவலகம் வாகன பராமரிப்பு ஆகியவற்றிற்கு செலவாகிறது. மீதமுள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் இதுவரை ரூ.10 கோடியே 61 லட்சம் மட்டுமே வரி வசூல் ஆகியுள்ளது. மீதமுள்ள ரூ.6 கோடியே 43 லட்சத்தை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகராட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவைகளை உடனடியாக நகராட்சிக்கு நிலுவையின்றி செலுத்த வேண்டும்.

இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவைகளை http://tnurbanepay.tn.gov.in என்ற அரசு இணையம் வழியாக செலுத்தவும் வழிவகை செய்யபட்டுள்ளது. எனவே தவறினால் ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு போன்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் துண்டிப்பு செய்யப்பட்ட குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் மறுமுறை நகராட்சி மூலம் வழங்க இயலாது. மேலும் அபராத கட்டணம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் அபராதத்தை தவிர்க்க உடனடியாக நகராட்சி செலுத்த வேண்டிய வரி தொகையை செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் சுபாஷினி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post திருவள்ளூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Municipality ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில்...