×

கொடுத்த வாக்குறுதி என்னாச்சு…மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை: துரை வைகோ ஆவேசம்

கோவை காந்திபுரத்தில் உள்ள மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பாஜ உள்பட அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நிதி சட்ட விரோதமானது, தேர்தல் பத்திரம் செல்லாது என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை, மதிமுக வரவேற்கிறது. தேர்தல் பத்திரம் மூலமாக நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ரூ.12,000 கோடி நிதி பெற்றுள்ளன.

இதில், பாஜ மட்டும் ரூ.6,500 கோடிக்கும் அதிகமாக நிதி பெற்றுள்ளது. இப்படி, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜ தேர்தல் நிதி பெற்று, அந்நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு மீண்டும் மோடி ஆட்சி தேவை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதலில், தலைநகரில் போராடும் விவசாயிகளை மோடி அரசு பாதுகாக்கட்டும். மற்றவற்றை பிறகு பார்க்கலாம். மோடி ஆட்சியில், கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதற்கு, மோடியும், அண்ணாமலையும் முதலில் பதில் சொல்லட்டும், அதற்கு அப்புறம் நாட்டு பாதுகாப்பு பற்றி பேசட்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் இரட்டிப்பாக உயரும் என்றார் மோடி. ஆனால், இன்று லட்சக்கணக்கில் விவசாயிகள் மடிகிறார்கள். இதற்கு யார் காரணம்? இது, கொலை குற்றத்துக்கு சமம். பாஜவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை என அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி, எதிர்கட்சியினர் மீது ஏவி விடுகின்றனர்.

உதாரணமாக, தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது, மோடி அரசின் ஜனநாயக விரோத செயலின் உச்சம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும், பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு. மதவாத சக்திகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதே எங்களது ஒரே நோகந்கம். அதற்காக, கடுமையாக உழைப்போம்.

தமிழகத்தில் நாங்கள் திமுக கூட்டணியில் வலுவாக உள்ளோம். இந்த தேர்தலில், திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும்? என்பது முக்கியம் அல்ல. பாஜ வீழ்த்தப்பட வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பதை கட்சிதான் முடிவு செய்யும். பாஜ எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறதா? அல்லது வேஷம் போடுகிறதா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

The post கொடுத்த வாக்குறுதி என்னாச்சு…மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை: துரை வைகோ ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Durai Vaiko ,MDMK ,Gandhipuram, Coimbatore ,General Secretary ,BJP ,
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...