×

குழந்தை நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: குழந்தை நலக் குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்கான தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல. விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகபணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொணடவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகபணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனிதமேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற, தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு நபர் குழந்தை நலக் குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். அதன்படி குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மேற்கண்ட தகுதிகளை உடையவர்கள் இதற்கான விண்ணப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இன்று முதல் 15 நாட்களுக்குள் சென்னை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சமூகப்பாதுகாப்புத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குழந்தை நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Child Welfare Committee ,Chennai ,Rashmi Siddharth Jagade ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய...