×

டக்கெட் சதத்தில் இங்கிலாந்து பதிலடி: முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்

ராஜ்கோட்: இந்திய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டக்கெட் அதிரடியாக சதம் விளாசினார். முன்னதாக, இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பெட் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் 131, அறிமுக வீரர் சர்பராஸ் கான் 62 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். ஜடேஜா 110 ரன், குல்தீப் 1 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். குல்தீப் 4, ஜடேஜா 112 ரன் (225 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெளியேற, இந்தியா 331 ரன்னுக்கு 7வது விக்கெட்டை பறிகொடுத்தது.

இந்த நிலையில், அறிமுக வீரர் துருவ் ஜுரெல் – அஷ்வின் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். அஷ்வின் 37, ஜுரெல் 46 ரன் (104 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ரெஹான் அகமது சுழலில் பெவிலியன் திரும்பினர். பும்ரா 26 ரன் எடுத்து வுட் வேகத்தில் எல்பிடபுள்யு ஆக, இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்து ஆல் அவுட்டானது (130.5 ஓவர்). சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 4, ரெஹான் 2, ஆண்டர்சன், ரூட், ஹார்ட்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்துள்ளது (35 ஓவர்). கிராவ்லி 15, போப் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் பென் டக்கெட் 133 ரன் (118 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோ ரூட் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஷ்வின், சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கை வசம் 8 விக்கெட் இருக்க, 238 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

அஷ்வின் 500

* இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் (37 வயது), இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி விக்கெட்டை நேற்று வீழ்த்தியபோது டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார் (98வது டெஸ்ட்). இந்த சாதனையை நிகழ்த்தும் 2வது இந்திய பவுலர் என்ற பெருமை அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக அனில் கும்ப்ளே 619 விக்கெட் வீழ்த்தி உள்ளார் (132 டெஸ்ட்). சர்வதேச அளவில் 500 விக்கெட் வீழ்த்திய 9வது பவுலர் அஷ்வின்.

The post டக்கெட் சதத்தில் இங்கிலாந்து பதிலடி: முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் appeared first on Dinakaran.

Tags : England ,Duckett ,India ,Rajkot ,Saurashtra… ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை