- காங்கிரஸ் கட்சி
- வருமான வரி
- புது தில்லி
- வருமான வரி நீதிமன்றம்
- அகில இந்திய காங்கிரஸ் கட்சி
- வருமானவரித் துறை
- தின மலர்
புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக மீண்டும் பயன்படுத்த வருமான வரித்துறை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகிய வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற பரபரப்பான சூழலில் கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை நேற்று அதிரடியாக முடக்கியது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நேற்று கூறியதில், ‘‘நாங்கள் அளிக்கும் எந்த ஒரு காசோலைகளையும் வங்கிகள் தரப்பில் வாங்குவதில்லை. இந்த தகவல் வியாழக்கிழமை தான் எங்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரச்னை குறித்து விசாரிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக ஒரு சொத்தை காரணத்தை கூறி வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன், ரூ.210 கோடி அபராதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை விதித்துள்ளது.
குறிப்பாக பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் எங்களின் ‘‘கிரவுட் பண்டிங்” வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எங்களது பணத்தை எடுக்க முடியவில்லை. குறிப்பாக எங்களது கட்சி அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கோ அல்லது மின்சாரம் கட்டணம் செலுத்துவதற்கோ பணம் இல்லை. வருமான வரித்துறையின் இந்த செயல்பாடு என்பது வெறும் வங்கிக் கணக்குகள் முடக்கம் மட்டும் கிடையாது. மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமமாகும் என்று கூறினார்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த மறுநாளே, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது அரசியல் பரபரப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி உடனடியாக அணுகி பிரச்னையை தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை தீர்ப்பாயம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தற்காலிக நிவாரணம் வழங்கி அனுமதித்துள்ளது.
ரூ.115 கோடி குறைந்தபட்ச இருப்பு வைக்க நிபந்தனை: வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்கிய வருமான வரித்துறை தீர்ப்பாயம், வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.115 கோடி இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், எங்கள் கட்சிக்கு வங்கிகளில் உள்ள நடப்பு கணக்குகளில் ரூ.115 கோடி இல்லை. மிகவும் குறைந்த தொகையே உள்ளது என்று தெரிவித்தது.
மோடி அச்சப்பட வேண்டாம் – ராகுல்
வங்கி கணக்குகள் முடக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி கிடையாது. மாறாக அது மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைகுனிய மாட்டோம். ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் தொண்டரும் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசி வரை போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
The post வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி: தீர்ப்பாயம் நடவடிக்கை appeared first on Dinakaran.