×

பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை (17.2.2024) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை: பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை (17.2.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (17.2.2024) தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, 732 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டடங்கள்:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்கள்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (IT Tower);

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள்,2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள்;

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்,டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும்
வகையில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டடம்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு துறைக் கட்டடங்களை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் 732 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

அத்துடன், இன்போசிஸ் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர் பெருமக்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்

The post பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை (17.2.2024) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,Department of Rural Development and Livestock ,Department of School Education ,Information Technology ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...