×

கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கெட்டினமல்லி கிராமத்தில் திசைமாறி வந்து, இரும்பு வேலியில் சிக்கிய 3 வயது பெண் புள்ளிமானை கிராம மக்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மானை நேமலூர் காப்பு காட்டில் பத்திரமாக விடுவித்தனர். கும்மிடிப்பூண்டி அருகே கெட்டினமல்லி கிராமத்துக்கு வெளியே இன்று காலை விவசாய நிலத்தின் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்த இரும்பு வேலியில், சுமார் 3 வயதான பெண் புள்ளிமான் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தது.

இதை பார்த்ததும் கிராம மக்கள் ஓடிச்சென்று, அங்கு இரும்பு வேலியில் சிக்கியிருந்த பெண் புள்ளிமானை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இதுகுறித்து மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருடன் மீட்கப்பட்ட புள்ளிமானை அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

அந்த பெண் புள்ளிமானுக்கு சுமார் 3 வயது இருக்கலாம் என்றும், அது தண்ணீருக்காக திசைமாறி ஊருக்குள் வந்திருக்கலாம் என அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானை மீட்டு, மாதர்பாக்கம் அருகே அமைந்துள்ள நேமலூர் காப்புக் காட்டில் பத்திரமாக விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Ketinamalli ,Nemalur reserve forest ,Dinakaran ,
× RELATED பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!