×

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பங்குகளில் முதலீடு செய்ய வைத்து பல கோடி மோசடி: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் எச்சரிக்கை

சென்னை: பணத்தை பங்குகளில் முதலீடு செய்யும் நபர்களை குறிவைத்து மோசடி நபர்கள் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பங்கு முதலீட்டு மோசடியில் ஈடுபடுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து வருவதாகவும், இதனால் பங்குகளில் முதலீடு செய்யும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐஐஎப்எல் செக்யூரிட்டீஸ் மற்றும் பிளாக்ராக் கேபிடல் போன்ற பிரபலமான முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக காட்டி, சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் முதலீடு செய்யும் நபர்களை தொடர்பு கொள்கின்றனர். புகழ்பெற்ற நிறுவனங்களைப் போல் காட்டிகொள்வதன் மூலம், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அவர்கள் பெறுகின்றனர். அதன் மூலம் ஒரு நிறுவனத்தின் பெயரில் கணக்கை உருவாக்க கூறி அதன் மூலம் பொதுமக்களை முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வைக்கிறார்கள்.

பிறகு பணத்தை பங்குகளில் முதலீடு செய்வதாக போலிக் காரணத்தை கூறி பல வங்கிக்கணக்குகளுக்கு பெரிய தொகையை மாற்றும் படி வற்புறுத்துகிறார். பிறகு முதலீடு செய்தவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மோசடி நபர்கள், வாங்கத்தயாராக இல்லாத பங்குகளை வாங்குவதற்குப் பணத்தை மாற்றுவதாக அச்சுறுத்தவும், பங்குகளை வாங்குவதாகக் கூறப்படும் பணத்தை ஈடுகட்ட கடன்களை வழங்குவதாகவும் கூறுகின்றனர். மோசடி செய்பவர் உறுதியளித்தபடி முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறவோ அல்லது பங்குகளை விற்கவோ முடியவில்லை என்பதை பாதிக்கப்பட்டவர் இறுதியில் உணர்கின்றனர். எனவே இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.

* இதுபோன்ற மோசடிகளை தடுப்பது எப்படி:

* எந்தவொரு வாய்ப்பிலும் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டை வழங்கும் நிறுவனம் அல்லது தனிநபர் பற்றி முழுமையாக ஆராயுங்கள். அவர்களின் நற்சான்றிதழ்கள், பின்னணி மற்றும் அவை தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். அதிக வருமானம் தரும் வாக்குறுதிகளில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு முதலீட்டு வாய்ப்பு வழக்கத்திற்கு மாறாக அதிக வருவாயை ஆபத்து இல்லாமல் உறுதியளிக்கிறது என்றால், அது போலியாக இருக்கலாம்.

* உணர்ச்சி அல்லது அழுத்தத்தின் அடிப்படையில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். மோசடி செய்பவர்கள் தனி நபர்களை விரைவான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு அதிக அழுத்த தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எந்தவொரு வாய்ப்பையும் கவனமாக மதிப்பீடு செய்ய உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தனிப்பட்ட அல்லது நிதி தகவலை வழங்குவதற்கு முன் எப்போதும் சரிபார்க்கவும். ஆன்லைனிலோ அல்லது தொலைபேசியிலோ தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைப் பகிரும் போது கவனமாக இருங்கள். தகவலை வழங்குவதற்கு முன், தகவலைக் கோரும் தனிநபர் அல்லது அமைப்பின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும்.

* எப்போதும் நம்பகமான ஆதாரங்களைப் பயன்படுத்தவும். முதலீட்டு வாய்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, புகழ்பெற்ற முதலீட்டுதளங்கள், தரகர்கள் அல்லது நிதி ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்யவும். முதலீடுகளை ஊக்குவிக்கும் கோரப்படாத மின்னஞ்சல்கள். சமூக ஊடக செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பங்குகளில் முதலீடு செய்ய வைத்து பல கோடி மோசடி: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : ADGP ,Sanjay Kumar ,CHENNAI ,Dinakaran ,
× RELATED குரல் குளோனிங்கை பயன்படுத்தி...