×

மும்பை விமான நிலையத்தில் ‘வீல் சேர்’ இல்லாததால் 1.5 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 80 வயது பயணி மாரடைப்பால் பலி

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ‘வீல் சேர்’ இல்லாததால் விமானத்தில் இருந்து முனையம் வரை 1.5 கிலோமீட்டர் நடந்தே சென்ற 80 வயது பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். 80 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் கடந்த 12ம் தேதி நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டார்.

காலை 11.30 மணிக்கு மும்பை விமான நிலையம் வர இருந்த விமானம் மதியம் 2.10 மணிக்கு தாமதமாக வந்து சேர்ந்தது. விமானத்தில் இருந்து முனையம் செல்வதற்கு தனக்கும், தன் மனைவிக்கும் சேர்த்து இரண்டு ‘வீல் சேர்’ வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்திடம் முன்கூட்டியே முதியவர் கேட்டிருந்தார். ஆனால் ஒரே ஒரு வீல் சேர் மட்டுமே இருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்த வீல் சேரை தன் மனைவிக்கு கொடுத்த முதியவர், விமானத்தில் இருந்து முனையம் வரை சுமார் 1.5 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளார். அங்குள்ள கவுண்டரில் முதியவரின் சான்றிதழ்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திடீரென நெஞ்சில் கைவைத்தபடி முதியவர் சரிந்து விழுந்தார். உடனடியாக விமான நிலையத்தில் இருந்த முதலுதவி டாக்டர்கள் முதியவரை சோதனை செய்தனர்.

அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து அருகில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு முதியவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாட்டின் முக்கியமான விமான நிலையத்தில் வீல் சேர் தட்டுப்பாட்டால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post மும்பை விமான நிலையத்தில் ‘வீல் சேர்’ இல்லாததால் 1.5 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 80 வயது பயணி மாரடைப்பால் பலி appeared first on Dinakaran.

Tags : Mumbai airport ,MUMBAI ,New York ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!