×

சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது உறுதி

சென்னை: சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பது உறுதியாகியுள்ளது. புதுவையை தொடர்ந்து, சென்னையிலும் பஞ்சுமிட்டாயில் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கெமிக்கல் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

பிங்க், ஊதா, மஞ்சள் என பல வண்ணத்தில் பஞ்சு மிட்டாய்களை விற்பதால் குழந்தைகள் சிறுவர்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள், அடர் ரோஸ் கலரில் இருந்ததால் உணவு பாதுகாப்பு துறைக்கு சந்தேகம் வலுத்தது. புதுச்சேரி கோரிமேடு பகுதியில் பஞ்சுமிட்டாய் விற்ற வட மாநில தொழிலாளியை பிடித்து பஞ்சுமிட்டாயை வாங்கி ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர்.

பஞ்சுமிட்டாய் கலர் கலரா இருக்க அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் உடல் நலக்கேடு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

பஞ்சுமிட்டாய் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் உணவு பொருள். கடற்கரை தொடங்கி கடை வீதிகள் வரை இவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த பஞ்சுமிட்டாயில் ஆபத்தான ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவை நிறம் பெறுவதற்காக சேர்க்கப்படும், ரோடமின் பி என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரசாயனத்தை உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. குறைந்த விலைக்கு கிடைப்பதால் இதனை பஞ்சுமிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

The post சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Marina ,Besant Nagar ,Panchumittai ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்