×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்

சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது. செய்தியாக வந்தது என்னவென்றால், விவாகரத்து பெற்றிருக்கும் கணவருடன், அதாவது அப்பாவுடன் பேச வேண்டும் என்று மகன் கூறியதாகவும், அதற்கு தாய் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என்றும் வெளிவந்தது. அதற்கிடையில் நடந்த வாக்குவாதத்தில் தான், மகனைக் கொன்றதாக செய்திகளில் பார்க்க நேர்ந்தது. உண்மையில் நடந்தது என்னவென்பது, அந்தத் தாய்க்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.

இதில் சமூக மக்களின் பார்வையாக சொல்லப்பட்டது என்னவென்றால், பள்ளியில் மிகச்சிறந்த மாணவியாக இருந்திருக்கிறார் என்றார்கள். கல்லூரியில் பலவித போட்டிகளில் பங்கு பெற்றும், படிப்பிலும் சிறந்த மாணவியாக இருந்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் A1 என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு துறையில் மிகச் சிறந்த நபராக இருந்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இவை எல்லாமே அவரது அறிவின் திறனைப் பார்த்து அனைவரும் கூறுகிறார்கள். உண்மையில் அவரது மன உணர்வின் தன்மை என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் இங்கு தெரிந்திருக்க வேண்டும். திருமணம் முடிந்து, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 20% மனஉணர்வுகளின் தாக்கத்தால் இருக்கிறார்கள் என்று உளவியல் துறைகளில் கூறுகிறார்கள். இங்கு இந்தப் பெண்ணின் செயல்கள் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. மற்றபடி, நம் சமூகத்தில் பல விஷயங்கள் தெரிந்தும், தெரியாமலும்தான் இருக்கின்றன.

மக்களின் மனதில் சினிமா போன்ற ஊடகங்கள் கர்ப்பத்தை தாய்மை, பெண்மை என்று ரொம்ப புனிதப்படுத்தி பதிய வைத்திருக்கிறார்கள். உண்மையில் பெண்கள் தாய்மையை ரசிக்கிறார்களா என்றால், ரசிக்கிறார்கள்தான். ஆனால் அது மட்டுமே உண்மையல்ல. சிலருக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் உணர்வுகளின் தாக்குதல்களைக் கையாளத் தெரியாமல் இருப்பார்கள். ஏனென்றால், சிலருக்கு பிறந்த குழந்தையைப் பார்க்க பிடிக்காது, பால் கொடுக்கப் பிடிக்காது, அவர்களுக்கு உடல்ரீதியாக தினமும் செய்த விஷயங்களைச் செய்ய முடியாமல் போகும் போது, குழந்தையைப் பார்க்கும் போது எல்லாம் வெறுப்புணர்வைக் காண்பிப்பார்கள். அதனால்தான் உளவியல் துறையில் குழந்தை பிறந்த முதல் 42 நாட்கள் அம்மாவிடம் இருந்து மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய நாட்கள் என்று கூறுவார்கள்.

சினிமாவும், கலாச்சார நூல்களும் சேர்ந்து அவர்கள் சொன்னதை கர்ப்பமான பெண் மற்றும் குழந்தையைப் பெற்ற பெண் செய்யவில்லையென்றால், ஒரு எதிரியைப் போல் வீட்டிலுள்ளவர்களே பார்ப்பார்கள். அவர்களும் அந்தப் பெண்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இருப்பார்கள்.நம் வீடுகளில் திருமணத்துக்கு சம்மதமா என்று கேட்கும் பழக்கம் ஆரம்பித்துள்ளது போல், குழந்தை பெற்றுக்கொள்ளவும் விருப்பமா என்று கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அங்கங்கு திருமணம் கடந்த உறவுக்காக, கணவன் மனைவி சண்டைக்காக என்று குழந்தைகளை கொல்வதை செய்திகளில் படிக்கிறோம்.

பிரசவத்துக்கு பிறகான டிப்ரசன் (Postpartum Depression Psychosis) என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. அபாயகரமான மனநிலையில் குழந்தைகள் பிறந்தவுடன் ஒரு சில பெண்களின் உணர்வின் நிலை அமைந்திருக்கும். சிலருக்கு போதைப் பழக்கத்துடன் கணவருடன் உடலுறவு இருந்தது, சிலருக்கு சிறுவயதிலேயே கர்ப்பமாக இருக்கிற சூழல் வந்து விட்டதோ என்ற எண்ணம், சிலருக்கு வளரும் பருவத்திலேயே மனப்பாதிப்பு இருந்திருக்கும் போது, அது இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

சில நேரங்களில் எத்தனை தூரம் அன்பான கணவன், ஆதரவான குடும்பம் என்று இருந்தாலும் பெண்களுக்கு அதன் மீதான பற்று குறைந்து இருக்கும். அதனால்தான் குழந்தை பிறந்த பின், பெண்ணின் உடலைப் பார்த்து பச்சிளம் உடம்பு என்று கூறுகிறார்கள். பிபிடி-யால் (PPD) பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்குக் கவலையும் பதற்றமும் இருக்கும். உடலில் எனர்ஜியே இல்லாமல் இருப்பது போல் இருப்பார்கள்.

இந்த மனப்பாதிப்பால் சில தாய்மார்கள் குழந்தைகள் மீது தங்களுடைய வெறுப்புணர்ச்சியைத் தொடர்ந்து காண்பிப்பார்கள். குழந்தைகள் மீது தாய் மட்டுமல்ல சில நேரங்களில் தந்தைக்கும் பிடிக்காமல் போகும். அதனால் அவர்களால் உருவாக்கப்பட்ட சிசுவைப் பெற்ற தாயே அல்லது தந்தையே கொலை செய்யுமளவுக்கு அவர்களின் மனப்பாங்கு அமைந்துவிடும். இதை உளவியல் துறையில் நான்கு விதமாகப் பிரிப்பார்கள்.

Infanticide பிறந்த 24 மணி
நேரத்துக்குள் சிசுவைக் கொன்றுவிடுவார்கள்.
Neonaticide ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையைக் கொல்வார்கள்.
Maternal Filicide தாய் குழந்தையைக் கொல்வது.
Paternal Filicide தந்தை குழந்தையைக் கொல்வது.

இப்படி நான்கு விதமாக பெற்றோர்கள் குழந்தைகள் மீது உச்சக்கட்ட வெறுப்புணர்வைக் காட்டுவார்கள். இம்மாதிரியான செயல்கள் அனைத்தும் மனநோயின் பாதிப்புகளாகும். ஆனால், அதற்கான சிகிச்சையைப் பற்றி பேசாமல், அங்கு நடந்த சம்பவங்களை வைத்தும், அவர்களின் திறமையை வைத்து மட்டுமே பேசு பொருளாக மாற்றிவிடுகிறார்கள்.

அவர்களின் மனப்பாதிப்பு அல்லது அவர்களின் உணர்ச்சியின் அதீத தீவிரம் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களும் தொடர்ந்து அவர்களுக்குப் புரிந்த வகையில், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். உதாரணத்துக்கு, கர்ப்ப காலத்திலேயே குழந்தை வேண்டாம் என்பார்கள், வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றித் திட்டுவார்கள், ஏன் இப்படி ஆனோம் என்று தங்களுக்குத் தாங்களே வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் நாம் சாதாரணமாகக் கடந்து விடுவோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவர்களின் பிறப்பிலிருந்து வளரும் சூழலில் மனதளவில் ஏற்படும் சங்கடங்களின் பாதிப்புகள் அவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.

அந்தப் பாதிப்புகளை ஏதோ ஒரு காலக் கட்டத்தில் வெளிப்படுத்தத்தான் பார்ப்பார்கள். அதற்கான நேரமாக உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும்போது, உறவுகளில் விரிசல் ஏற்படும் சூழல் என்று பலவீனமான தருணத்தில் அந்த நேரத்தில் ஒட்டு மொத்த உணர்ச்சிகளையும் கொட்டிவிடுவார்கள். சில நேரங்களில் அந்தந்த சூழலில் அந்தப் பிரச்னைகளின் தீவிரம் முடிந்துவிடும். ஆனால் சிலருக்கு எபிசோடு (Episode) கணக்காக எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது.

சிலருக்குப் போதைப் பொருள் எடுத்த நேரத்தில் டிப்ரெஸன் எபிசோட் ஆரம்பிக்கலாம். சிலருக்குத் தனக்குப் பிடிக்காத பெற்ற குழந்தைகள் எதிர்த்துப் பேசும் போதும் அல்லது அதிகமாக சேட்டைகள் செய்யும் போதும் பிபிடி (PPD) பாதிப்புகள் வெளிப்பட ஆரம்பிக்கும். சில நேரங்களில் கணவன் மனைவி பிரிவில் பழி வாங்கும் எண்ணங்களுடன் அவர்களின் மனக்கிளர்ச்சி அதிகமாகும்.

சிலருக்கு அவர்களின் ஆளுமைக் கோளாறால் (Personality Disorder) ஏற்படும் மனப்பாதிப்புகள் வேறு இருக்கும். அதன் வெளிப்பாட்டால் உடனுக்குடன் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தீவிரம்தான் அவர்களை வேறொரு எல்லைக்கு கொண்டு செல்ல வைக்கும். இவற்றைப் பற்றி உளவியல் துறையில் இருப்பவர்கள் கர்ப்ப காலங்களில் இருக்கும் பெண்களின் மனநல பிரச்சனைகளைப் பற்றி புரிந்துகொள்வார்கள். ஆனால், கோபப்படுவதுக்கு, எரிச்சல் படுவதுக்கு, கவலைப்படுவதுக்கு எல்லாம் கவுன்சிலிங் போக வேண்டுமா என்ற கேள்வியும், அதன் பின் இருக்கும் ஒரு சலிப்பும், தங்களுடன் இருக்கும் பெண்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கான நிலையின் விபரீதம்தான் சிசுக்கொலையாக பெரிய பாதிப்பை பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்பது எத்தனை சவாலானது என்று தொடர்ந்து பேசும் சமூகம்தான், அந்த நேரத்தில் ஏற்படும் மனப்பாதிப்புகளை பற்றி சமூகம் பேச விரும்புவதில்லை. போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் என்று கூறுகிறார்கள் தவிர, அதற்கான சிகிச்சையைப் பற்றி தெரிந்துகொள்ள சோம்பேறிப்படுகிறார்கள்.இங்கு பெண்களின் உடல் நலனைப் பற்றிய அக்கறை ரொம்பக் குறைவாக இருக்கிறது. அதிலும் பெண்களின் மனநலம் பற்றிய சிகிச்சை என்றால் ரொம்ப யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

இதற்கான பழியாக ஆண்கள் மட்டுமில்லை, பெண்களே போக யோசிப்பார்கள். அதன் பின் இம்மாதிரி செய்திகள் படிக்கும் போது, ஒரு அம்மா இப்படி செய்யலாமா என்பதும் அல்லது திருமணம் கடந்த உறவின் மீது தாக்கம் என்று ஒரேயடியாக காரணத்தை அதன் மீது போட்டு விட்டு கடந்து விடுவதுமாக மக்களின் மனப்பாங்கு இருக்கிறது.

என்றைக்கும் ஒரு பாதிப்பு ஏற்படும் போது தான், சில விழிப்புணர்வுகள் பற்றி நிறையப் பேசத் தொடங்குவோம். அது போல் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு, போஸ்ட் பார்ட்ம் டிப்ரெஷன் பற்றிய சிகிச்சை சார்ந்து இனி பெண்களே யோசிக்காமல் மனநல மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதே சிறந்தது. எல்லாவற்றுக்கும் பெண்கள் தான் இறங்கி வர வேண்டும். இதற்கும் வந்து சிகிச்சை எடுக்கப் பாருங்கள். இது பெண்களுக்கும், அவர்களால் உருவான குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மற்றும் முக்கியமாக தேவைப்படும் சிகிச்சையாகும். இனி தாயாலும், தந்தையாலும் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாப்போம்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi ,
× RELATED மனவெளிப் பயணம்