×

சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஒரு குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவர்களை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்பதுதான் பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட பிளே ஸ்கூலில் சேர்த்துவிட்ட பிறகு அடுத்தகட்டமாக அவர்களுக்கு என்னென்ன பயிற்சி அளிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, பாட்டு, நடனம், கீபோர்ட், கால்பந்து, கிரிக்கெட்… இப்படி பலவிதமான பயிற்சிகளில் அவர்களை சேர்த்துவிடுவார்கள். இவை எல்லாம் போட்டி நிறைந்தது. மேலும் குழந்தைகள் கொஞ்சம் சீரியசாக எடுக்க வேண்டிய பயிற்சிகள்.

அப்பதான் அவர்கள் அடுத்தகட்டத்திற்கு போக முடியும். ஆனால் குழந்தைகள் குழந்தைகளாக வளர வேண்டும். இது போன்ற பயிற்சிகளை அவர்கள் விவரம் புரியும் வயதில் எடுத்துக் கொண்டால் போதும். குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் ஏற்ற பயிற்சி அளித்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘டைனி டம்பில்ஸ்’. இது ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடம். முழுக்க முழுக்க குழந்தைகளின் மனநிலை மற்றும் அவர்களுக்கு பிடித்த முறையில் இங்கு பயிற்சி அளிக்கப்படும். சென்னை அடையாரில் இயங்கி வரும் இந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கூடத்தினை லஹரி பார்த்தசாரதி துவங்கியுள்ளார்.

‘‘அடிப்படையில் நான் ஒரு ஐ.டி பட்டதாரி. படிப்பு முடிஞ்சதும், அந்த துறையில்தான் வேலை பார்த்து வந்தேன். இந்தப் பயிற்சிக் கூடம் முழுக்க முழுக்க என் குழந்தைகளின் மனநிலையை மனதில் கொண்டு தான் ஆரம்பித்தேன். இது போன்ற குழந்தைகளுக்கான ரெக்கிரியேஷன் ஜிம்னாஸ்டிக் கூடம் சென்னையில் இல்லை. ஆனால் நான் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பயணித்த போது, அங்கு இது போன்ற ஜிம்னாஸ்டிக் கூடங்களை பார்த்திருக்கேன். பிரத்யேகமாக குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் இங்கு சென்னையில் என் குழந்தைகளுக்காக தேடிய போது எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு இரண்டு மகன்கள்.

அவர்களுக்கு பொழுதுப் போக்காகவும் அதே சமயம் அவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்னுதான் பார்த்தேன். ஆனால் அதற்கான இடம் இங்கு எதுவுமே இல்லை. சில விளையாட்டுக்கூடங்கள் உள்ளன. அதில் சும்மா குதிப்பதும், பந்துகள் நிறைந்த தொட்டிக்குள் விளையாடுவது போன்றுதான் இருந்தது. அப்படிப்பட்ட விளையாட்டாக இல்லாமல் அவர்களுக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நான் வெளிநாட்டில் பார்த்த குழந்தைகளுக்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தை இங்கு ஏன் துவங்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. ஜிம்னாஸ்டிக் மூலம் ஒரு விளையாட்டு கற்றுக்கொள்ளலாம். அதே சமயம் அவர்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

அதாவது, குழந்தைகள் சின்ன வயதில் இருந்தே ஃபிட்டாக இருக்க இந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றவர் இந்த பயிற்சி மையம் ஆரம்பித்து ஒரு மாதம் தான் ஆகிறதாம்.‘‘நான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிறகு அதற்கான முழு ஆய்வில் இறங்க ஆரம்பித்தேன். காரணம், இங்கு குழந்தைகளுக்கான பொழுதுபோக்கிற்காக ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும், அதில் பெரியவர்கள் பயிற்சி பெறக்கூடியதாகத்தான் உள்ளது.

அதுவும் அவர்கள் போட்டியில் பங்கு பெறுவதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் என்னுடைய டார்கெட் ஒரு வயது முதல் 12 வயது குழந்தைகள் மட்டும்தான். இங்கு பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைக்கு 3 வயதானதுமே அவர்களை பாட்டு, நடனம், விளையாட்டு போன்ற பயிற்சிக்கு உட்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு மூன்று வயது குழந்தைக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கும் போது, அவர்களுக்கு அந்த விளையாட்டின் விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளவே குறைந்தபட்சம் மூன்று வருடங்களாகும். அப்படி இருக்கும் போது, ஏன் நாம் குழந்தைகள் மனதில் இதனை திணிக்க வேண்டும்.

அவர்களின் குழந்தை பருவத்தினை மகிழ்ச்சியாக கழிக்கட்டுமே. இங்கு நாங்க அளிக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் அவர்களுக்கு எந்தவித அழுத்தமும் நாங்க கொடுப்பதில்லை. ஒரு பயிற்சி அவர்கள் எடுக்கும் போது அவர்களுக்கு அது சரியாக வரவில்லை என்றால் அன்றே அந்த பயிற்சியை கஷ்டப்பட்டு செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் அந்த பயிற்சியினை படிப்படியாக கற்றுக் கொள்ளலாம். சில சமயம் அவர்களுக்கு அன்று பயிற்சி எடுத்துக் கொள்ளும் மனநிலை இருக்காது. அந்த சமயத்திலும் அவர்களுக்கு வேறு விளையாட்டு, ஜும்பா நடனம் போன்ற பயிற்சியை அளித்து அவர்களின் மனநிலையை சந்தோஷமாக மாற்றுவோம்.

இதனால் குழந்தைகள் மிகவும் ஜாலியாக இந்தப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு இந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சியினை அவர்களுக்கு பிடித்த மாதிரி கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். இதற்காக பிரத்யேகமாக குழந்தைகளை கையாளக்கூடிய ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்களை தேர்வு செய்தேன். தற்போது நான்கு பயிற்சியாளர்கள் உள்ளனர். அதேபோல் ஒரு பேட்சில் 25 குழந்தைகள்தான். அப்போதுதான் நான்கு பேராலும் அவர்களை தனிப்பட்ட முறையில் பார்த்துக்கொள்ள முடியும்’’ என்றவர் இந்த பயிற்சிக்கூடம் அமைக்க அவர் சந்தித்த சவால்கள் பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக இது போன்ற பயிற்சிக்கூடம் அமைக்கும் போது, அதேபோல் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மற்றொரு மையத்தைதான் நம்முடைய மாடலாக எடுத்துக்கொள்ேவாம். ஆனால் என்னுடைய ஜிம்னாஸ்டிக் மையத்திற்கான மாடல் அமைப்பு இங்கு இல்லவே இல்லை. மேலும் குழந்தைகளுக்கானது என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு முறை மிகவும் அவசியம். அதனால் இணையத்தில் இது போல் குழந்தைகளுக்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையம் எங்குள்ளது என்று தேடினேன்.

அதில் கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா போன்ற இடங்களில் இருப்பது தெரிய வந்தது. அதனை நடத்தும் உரிமையாளர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள்தான் இதனை எவ்வாறு அமைக்க வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் நன்கு தேர்ச்சிப் பெற்ற சான்றிதழ் கொண்ட பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அனைத்து விவரங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

ஒரு சின்ன சந்தேகம் என்றாலும் முகம் கோணாமல் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். அதன்படிதான் டைனி டம்பிள்ஸ் உருவானது. இங்குள்ள உபகரணங்கள் எல்லாம் பெரியவர்கள் பயன்படுத்துவதுதான். ஆனால் அதனை சின்னக் குழந்தைகளுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்திருக்கிறேன். தரை முழுக்க ஃபோம் மெத்தைகள் போட்டிருக்கிறேன். அதேபோல் சுவர்கள் மற்றும் உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருக்கும் இடங்களிலும் ஃபோம் வசதிகள் செய்திருக்கிறோம். இதனால் குழந்தைகள் கீழே விழுந்தாலும் அவர்களுக்கு அடிபடாது. காரணம், விளையாட்டு என்றாலும் அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள். குழந்தைகளுக்கு அனைத்து பாதுகாப்பு அம்சம் இருந்தால்
தான் பெற்ேறார்களும் தைரியமாக குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்ப விரும்புவார்கள்.

புதன் கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் பயிற்சி எடுக்கலாம். ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் உடன் பயிற்சி எடுக்க வேண்டும். காரணம், அந்த வயதில் குழந்தைகள் புதிய நபர்களுடன் இருக்க பயப்படுவார்கள். அம்மா அல்லது அப்பாவை தேடுவார்கள். அதனால் இந்த வயது குழந்தைகளுக்கு பயிற்சியாளர்கள் கண்காணிப்பில் பெற்றோர்கள்தான் பயிற்சி அளிப்பார்கள்.

அதாவது பயிற்சியாளர்கள் பெற்றோர்களுக்கு சொல்லித் தர அதை அவர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பார்கள். மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு உடன் பெற்றோர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த பயிற்சிக்கூடம் முழுக்க முழுக்க கண்ணாடி கொண்ட தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால், உள்ளே குழந்தைகள் என்ன பயிற்சி எடுக்கிறார்கள் என்று பெற்றோர்கள் வெளியே இருந்து பார்க்கலாம்.

மேலும், ஒரு குழந்தை உள்ளே பயிற்சி எடுக்க, அவர்களுக்கு மற்றொரு குழந்தை இருந்தால், காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் விளையாட சின்ன விளையாட்டு கூடமும் அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துதான் வடிவமைத்து இருக்கிறேன். என்னுடைய அடுத்த திட்டம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இங்கு ஜிம்னாஸ்டிக் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் வேண்டும். அதற்கான தேடலில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார் லஹரி பார்த்தசாரதி.

தொகுப்பு: ஷன்மதி

The post சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் appeared first on Dinakaran.

Tags : kumkum dothi ,Dinakaran ,
× RELATED சைகை மொழி