×

வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் புகை

நன்றி குங்குமம் தோழி

சினிமா, சின்னத்திரை அல்லது விளம்பரங்களில் புகைப் பிடிப்பது போன்ற காட்சி வந்தால், கீழே சிறிய எழுத்தில் ‘புகைப் பிடிப்பது உடலுக்கு கேடு தரும்’ என்ற வாசகம் வருவதை பார்த்து இருப்போம். மேலும் சிகரெட் பாக்கெட்டிலும் இது போன்ற வாசகம் குறிப்பிடப்பட்டு இருக்கும். இது போன்ற வார்னிங் கொடுத்தும் பலர் அந்தப் பழக்கத்திற்கு இன்றும் அடிமையாகத்தான் உள்ளனர். புகைப் பிடிப்பதால் மட்டும் ஒருவரின் உடலில் கேடு ஏற்படாது. புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதாவது, புகைப்பிடிக்கும் இடத்தில் இருப்பவர்கள், அதனை சுவாசிப்பதாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். சொல்லப்போனால் புகைப் பிடிப்பவர்களுக்கு 100% பாதிப்பு ஏற்பட்டால், அதனை சுவாசிப்பவர்களுக்கு 70% பாதிப்பு ஏற்படும் என்கிறார் இதய நிபுணரான டாக்டர் விவேகன்.‘‘புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக இதய பிரச்னை ஏற்படும். அதாவது, சிகரெட் பிடிப்பதால், ஒருவரின் ரத்தக்குழாய் சுறுங்கும். பொதுவாக ஹார்ட் அட்டாக் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஏற்படும்.

அதாவது, ரொம்ப காலம் கொழுப்பு ரத்தக்குழாயில் தங்கி ஒரு கட்டத்தில் இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும். அதுவே சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த கொலஸ்ட்ரால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, சாதாரணமாக இருப்பவர்களுக்கு இந்த அடைப்பு ஐந்து மாசத்தில் ஏற்பட்டால், சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இரண்டே மாசத்தில் ஏற்படும்.

இந்த பாதிப்பு இதயம் மட்டுமில்லாமல், மூளை மற்றும் சிறுநீரகத்தையும் பாதிக்கும். காரணம், இதயத்திற்கு செல்லக்கூடிய அதே ரத்தக்குழாய்தான் மூளை மற்றும் சிறுநீரகத்திற்கும் செல்வதால், அது ஸ்ட்ரோக் ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் சிறுநீரகத்திற்கும் பாதிப்பினை கொடுக்கும். அதனால் புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு தலை முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிரச்னை ஏற்படும் என்பதை அவர்கள் நினைவில் கொள்வது அவசியம்.

மேலும் ஸ்ட்ரோக் மற்றும் இதய பிரச்னை தான் உலகளவில் புகைப்பிடிப்பவர்கள் இறக்க முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் ஒருவரின் உடலில் ஸ்டாமினா குறையும் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். எப்படி இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் சுறுக்கம் ஏற்படுகிறதோ அதேபோல் நுரையீரலுக்கு செல்லக்கூடிய சுவாசக்குழாயிலும் சுறுக்கம் ஏற்படும். இதனால் அவர்கள் நுரையீரல் பிரச்னையை சந்திப்பார்கள். மேலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒரு சிலரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாமல் போகும்’’ என்றவர் புகைப்பழக்கத்தினால் 25 வயதிலேயே பலர் இதய பிரச்னையை சந்திப்பதாக கூறுகிறார்.

பொதுவாக ஹார்ட் அட்டாக் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் ஏற்படும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 25 வயதிற்கு மேல் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இதய பிரச்னைக்கு ஆளாகிறார்கள். அவர்களில் பலர் இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஸ்டன்ட் வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு புகைப் பழக்கம் இருக்கும். இன்றைய தலைமுறையினரில் பெண்களுக்கும் இந்தப் பழக்கம் உள்ளது. இதை ஒரு ஃபேன்சியாக நினைக்கிறார்கள். சிலர் ஹுக்கா, ஈசிகரெட் போன்றவற்றையும் எடுத்துக்கொள்கிறார்கள். அது சிகரெட் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.

சிகரெட்டில் 5000 ரசாயனங்கள் உள்ளது. அவை எப்படிப்பட்டவை என்றால் கார் மற்றும் ஏசி கூலன்ட்டில், பெயின்ட் தின்னர் போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் இதில் உள்ளது. இதுதான் உடம்புக்கு மிகவும் கெடுதலானது. ரத்தக்குழாய் பாதிப்பிற்கும் இது தான் முக்கிய காரணம். ஆனால் பலர் சிகரெட்டில்தான் நிகோடின் உள்ளது என்றும் ஈசிகரெட்டில் நிகோடின் இல்லை என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஈசிகரெட்டிலும் நிகோடின் உள்ளது. அது ஒருவிதமான போதை பொருள். ஒரு விதமான இன்பத்தை தரக்கூடியது. அதனால்தான் அவர்களுக்கு அது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இதில் முக்கியமாக எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், சிகரெட் மட்டுமில்லை அது சார்ந்த மற்ற பொருட்களும் உடலுக்கு கேடு விளைவிக்கும். இதுவும் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது’’ என்றவர் அதற்கான தீர்வினை அளித்தார்.

‘‘முதலில் புகைப்பிடிக்கும் பழக்கத்தினை முற்றிலும் நிறுத்தவேண்டும். அதற்கு செல்ப் கன்ட்ரோல் மிகவும் அவசியம். செயின் ஸ்மோக்கரா இருப்பவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். மேலும் ஈ.சி.ஜி, திரெட்மில் டெஸ்ட் போன்றவற்றையும் ஒவ்வொரு வருடமும் செக் செய்ய வேண்டும். இந்த ஆய்வு மூலமாக அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை முன்கூட்டியே கண்டறிய முடியும். பொதுவாக ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் நெஞ்சு பகுதியில்தான் வலி ஏற்படும் என்றில்லை.

இடது தோள்பட்டை அல்லது முதுகுப் பகுதியிலும் வலி ஏற்படும். இது எப்போது வேண்டுமானாலும் வரும். அதில் 90% ஆண்களுக்கு நடந்தா, பளு தூக்கினா, ஓடினால் நெஞ்சு வலி ஏற்படும். 10% பேருக்கு நெஞ்சுப் பகுதியில் ஏற்படாமல் இடது தோள்பட்டையில், கழுத்தில், பின் முதுகில் அல்லது வயிற்றுக்கு மேல் பகுதியிலும் வரலாம். இதை பலர் வாயு பிரச்னை என்று நினைத்து சுயவைத்தியம் செய்து கொண்டு அது பெரிய அளவில் பிரச்னையாக மாறும் போது தான் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இப்படி இல்லாமல் அவங்க இது போன்ற வலி ஏற்பட்டால், உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று இசிஜி எடுத்து பார்க்கவேண்டும். அதன் மூலம் பிரச்னை உள்ளதா அல்லது இல்லையா என்பதை அவர்கள் கண்டறிய முடியும்.

பல ஆண்டு காலமாக சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் நிகோடினிற்கு அடிமையாகி இருப்பார்கள். அதற்கு என சிகிச்சை முறைகள் உள்ளன. அதை மருத்துவர்களின் உதவியோடு கடைப்பிடிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் நிகோடின் சூயிங் கம் இருக்கு, நிகோடின் தேவையினை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க சில மாத்திரைகள் உள்ளன. இது எல்லாம் சிகரெட் பழக்கத்தை குறைக்கதான். இது முழுமையாக குணமாக்கும் என்று சொல்லிட முடியாது.

நிகோடின் தேவை அதிகம் உள்ளவர்களுக்கு வேறு வகையில் கொடுக்க தான் இந்த முறைகள். இதில் அதன் அளவு குறைவாக இருக்கும். ஆனால் நாம் என்ன மாற்றுக் கொடுத்தாலும், ஒருவர் அந்த பழக்கத்தை விட்டு முழுமையாக வெளியே வரவேண்டும். அவர்கள் நினைத்தால் மட்டுமே தான் அந்த பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியே வர முடியும். குறிப்பாக இது முக்கியமா இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும்’’ என்றவர் சிகரெட் பழக்கத்தினை துறப்பதால், நம் உடலில் ஏற்படும் அதிசயத்தை பற்றி விவரித்தார்.

‘‘உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பழக்கத்தையும் முற்றிலும் நிறுத்திவிட்டால், அதனால் நம் உடலில் நாம் பெரிய அளவில் மாற்றத்தினை பார்க்க முடியும். அவர்களின் நுரையீரல் மறுபடியும் புத்துயிர் பெறும். நன்றாக பசிக்கும், உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும், தூக்கம் நன்றாக இருக்கும். கவனச் சிதறல் ஏற்படாது. ஆனால் அதிக காலம் மற்றும் ஒரு நாட்களில் 50க்கும் அதிகமான சிகரெட் பிடிப்பவர்களுக்கு இந்த மாற்றம் ஏற்படாது, பாதிப்பு ஏற்பட்டது பட்டதுதான், ஆனால் அந்த பாதிப்பு மேலும் வலுவடையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அதனால் எந்த நேரத்தில் நாம் புகைப்பழக்கம் விட்டாலும் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். ஒவ்வொரு சிகரெட் பிடிக்கும் போது நம்முடைய வாழ் நாளில் ஒரு நாள் குறைவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த பிரச்னைகள் மட்டுமில்லாமல், குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படும், சிலருக்கு கருத்தரிப்பு ஏற்படும், பிறக்கும் குழந்தை பாதிப்புடன் பிறக்கும். இவர்களின் ரத்தக்குழாய் சுறுங்கி இருப்பதால், குழந்தைக்கு போதுமான ரத்தம் கிடைக்காத காரணத்தால் அதற்கான பக்கவிளைவுகள் குழந்தைக்கு ஏற்படும். அதாவது குறை மாதப் பிரசவம், பிறக்கும் போதே இதய பாதிப்பு இருக்கும். பெண்கள் சீக்கிரமாக வயதான தோற்றத்தினை பெறுவார்கள். முடி உதிர்வு ஏற்படும், சருமத்தில் சுறுக்கம் ஏற்படும்.

இதன் மூலம் மருத்துவராக நான் சொல்ல வருவது சிகரெட் மட்டுமில்லாமல் புகையிலை போன்ற பழக்கத்தையும் முற்றிலும் இன்றைய தலைமுறையினர் கைவிடவேண்டும். புகை நமக்கு பகை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்’’ என்றார் டாக்டர் விவேகன்.

தொகுப்பு: நிஷா

The post வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் புகை appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi ,Dinakaran ,
× RELATED சைகை மொழி