×

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்: ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்துள்ளதால், ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் வருமான வரித் துறையினர் முடக்கி விட்டார்கள். இப்பொழுது எங்களிடம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கோ அல்லது மின்சார கட்டணம் செலுத்தக்கூட பணம் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது ஜனநாயக விரோத போக்கு என்றும் நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டு X தள பதிவில் தெரிவித்ததாவது; காங்கிரஸ் கட்சியைப் பார்த்து மோடி பயப்பட வேண்டாம். காங்கிரஸ் பண வலிமைமிக்க கட்சியல்ல, மக்கள் வலிமைமிக்க கட்சி. சர்வாதிகாரத்தைப் பார்த்து இதுவரை நாங்கள் அடிபணிந்தது இல்லை.

இனியும் அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தைக் காக்க எங்கள் தொண்டர்களுடன் தொடர்ந்து போராடுவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்தது இல்லை, தலைவணங்கவும் மாட்டோம். பணபலத்தை விட, மக்கள் பலத்தையே நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்: ராகுல் காந்தி எம்.பி கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Rahul Gandhi ,Delhi ,treasurer ,Ajay Makhan ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் நண்பர்களிடம்...