×

மறந்த மரபுகள்

நன்றி குங்குமம் தோழி

அம்புஜம் சீமந்தம் முடிந்து நாள் பார்த்து பிரசவத்திற்கு தாய் வீடு வந்து விட்டாள். ஆசாரம், சம்பிரதாயங்களை மதிக்கும் சிறிய குக்கிராமம். கிராமத்து மக்கள் தினமும் தங்கள் வீட்டிலிருந்து அம்புஜத்திற்கு வாய்க்குப் பிடித்த பண்டங்களை கொடுத்து மகிழ்ந்தனர். அன்று மாலை கோலம் போட கிராமத்து மக்கள் வெளியே வந்த போது, அம்புஜத்தின் வீட்டு வாசலில் கோலம் போட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். குழந்தை பிறந்தவுடன் எந்த நேரமானாலும் நீர் தெளித்து கோலம் போடுவது அந்த கிராமத்து சம்பிரதாயம். இதன் மூலம் புதிதாக பிறந்த குழந்தையை மங்களகரமாக அழைக்க வேண்டும் என்பது வழக்கம்.

வாசலில் கோலத்தை பார்த்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கிண்ணத்தில் சர்க்கரையுடன் குழந்தையை பார்க்க வருவார்கள். குழந்தை பிறந்த ஏழாம் நாளில் காப்பு போடும் வைபவம் நடைபெறும். இதை அத்தை செய்ய வேண்டும். நெருங்கிய சொந்தங்கள் அழைக்கப்பட்டு நடைபெறும் இந்த சடங்கில் கன்னிப் பெண்களுக்கு முக்கிய பங்குண்டு. மாலை நேரம் 5 அல்லது 7 கன்னிப் பெண்கள் ஒரு குந்தாணியை சுற்றி வந்து கையில் வேப்பிலையுடன் ஆண் பிள்ளை பெற்றாள், பெண்பிள்ளை பெற்றாள், அடுப்பங்கரையில் பிள்ளை பெற்றாள் என்று பாடிக் கொண்டு அதன் நடுப்பகுதியில் தட்டுவர். அது முடிந்ததும் குழவி குளிப்பாட்டும் நிகழ்வு.

குழந்தை பேறு இன்றி அதனை ஆவலுடன் எதிர்பார்க்கும் பெண் அன்று அந்த வீட்டிற்கு வந்து அம்மிக் குழவியை குழந்தை குளிப்பாட்டுவதை போல் கால்களை நீட்டி அதன் நடுவில் இட்டு வெது வெதுப்பான நீர் ஊற்றி குளிப்பாட்டி, மை தீட்டி, திலகமிட்டு, பாலாடை கொண்டு பால் புகட்டி, மடியில் கிடத்திக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பெண்ணுக்கு மகப்பேறு கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏழாம் நாள் காப்பிற்கு, பச்சரிசியை ரவையாக்கி வறுத்து வெல்லப்பாகில் கிளறி செய்யும் காப்பரிசியும், கட்டிப்பருப்பு எனும் உடைச்ச கடலையை வெல்லப்பாகில் கலந்து தயாரிக்கும் இனிப்பும் தாம்பூலத்துடன் எல்லோருக்கும் வழங்கப்படும்.

குழந்தைக்கு தொட்டிலிட்டு பெயர் சூட்டும் விழா 11ம் நாள், காலை புண்ணியாசனம் நடைபெறும். மாலையில் பூக்களால் தொட்டில் அலங்கரிக்கப்பட்டு, குழந்தைக்கு புது உடைகள் அணிவித்து நகைகள் பூட்டி, தலை மாட்டில் கருப்பு கடலை சுண்டலை சிறு மூட்டை கட்டி வைத்து தாய் குழந்தையின் காதில் மூன்று முறை சூட்டப்பட்ட பெயரை உச்சரித்து, நெல் பரப்பப்பட்ட தாம்பாளத்தில் குழந்தையின் பெயரை எழுதுவாள். எல்லோருக்கும் தாம்பூலத்துடன் இனிப்புகள், நினைவுப் பரிசும் வழங்கப்படும். இப்பொழுது எல்லோரும் பணிக்குச் சொல்லும் காரணத்தால் பல சடங்குகள் சுருங்கி விட்டன. கருத்தரிப்பு மையங்கள் வந்ததில் பழைய சடங்குகளில் உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. இப்படியான சடங்குகள் உண்டு என்பதை மக்கள் மறந்தே விட்டார்கள்.

தொகுப்பு: சுதா, சென்னை.

The post மறந்த மரபுகள் appeared first on Dinakaran.

Tags : Ambujam Seemantham ,Ambuja ,
× RELATED அம்புஜா, ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்கிய கவுதம் அதானி