×

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை : தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஒடிசாவிலும் அறிவிப்பு

புபனேஷ்வர் : தமிழ்நாட்டை பின்பற்றி ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிருக்கு மாதம் ரூ.1000 தொகை, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை, காலை சிற்றுண்டி உணவு ஆகிய திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. மற்ற மாநிலங்களும் தமிழக அரசின் திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் “இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை போலவே ஒடிசாவும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என்றும் நவீன் பட்நாயக் குறிப்பிட்டார்.

The post உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை : தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஒடிசாவிலும் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Odisha ,Bhubaneswar ,Odisha government ,Tamil Nadu government ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு