×

தேக்கடி படகுத்துறையில் சிற்றுண்டிசாலையை சிதற விட்ட காட்டுயானைகள் : கலக்கத்தில் சுற்றுலாப்பயணிகள்

கூடலூர் : தேக்கடி படகுத்துறையில் சிற்றுண்டிசாலையை காட்டுயானைகள் அடித்து நொறுக்கிய சம்பவம், தேக்கடி வரும் சுற்றுலாப்பயணிகளை அச்சமடைய செய்துள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தேக்கடியில் யானைசவாரி, நேச்சர்வாக், மூங்கில் படகு சவாரி என பலபொழுது போக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.

தேக்கடி அமைந்துள்ள புலிகள் சரணாலயத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்காததால், படகுச்சவாரிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆனவச்சாலில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள படகுத்துறைக்கு வனத்துறை பேருந்துகளில் செல்கின்றனர். தேக்கடி படகுத்துறையில் சுற்றுலாப்பயணிகளுக்காக கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்தும் சிற்றுண்டிச்சாலை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் தேக்கடி வனப்பகுதியிலிருந்து வந்த யானைக்கூட்டம் இந்த சிற்றுண்டிச்சாலையை அடித்து நொறுக்கியது. படகுத்துறையில் உள்ள வனத்துறையினர் விரட்டியும் யானைகள் காட்டுக்குள் போகவில்லை. பின் காலை 6 மணி அளவில் யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.

தேக்கடி படகுத்துறையில் உள்ள சிற்றுண்டிசாலையை காட்டுயானைகள் அடித்து நொறுக்கிய சம்பவம் தேக்கடி வரும் சுற்றுலாப்பயணிகளை அச்சமடைய செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பகல்நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ளதால் யானைகள் படகுத்துறை பக்கம் வருவதில்லை. இருப்பினும், சுற்றுலாப்பயணிகளின் அச்சத்தைப்போக்க படகுத்துறையை சுற்றி அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

The post தேக்கடி படகுத்துறையில் சிற்றுண்டிசாலையை சிதற விட்ட காட்டுயானைகள் : கலக்கத்தில் சுற்றுலாப்பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Thekkady Ferry Terminal ,Cuddalore ,Thekkady ,India ,Thekkady Ferry ,Dinakaran ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்