×

திருக்கரம்பனூர் புருஷோத்தமப் பெருமாள்!!

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு, அதனாலேயே கர்வம், அவனது ஐந்தாவது தலையில் ஏறி அமர்ந்தது. மும்மூர்த்திகளில் ஒருவர் என்று புகழப்பட்டாலும், அம்மூர்த்திகளிலும் தானே முதல்வன் என்ற இறுமாப்பு மனதை இறுக்கியது. அதை ஈஸ்வரனாலேயே உணர முடிந்தது. தன்னை வணங்கி எழுந்த பிரம்மனின் தலைகளில் அந்த ஐந்தாவது தலை மட்டும் வணக்கத்தின் பணிவைக் காட்டாமல் நிமிர்ந்து நின்று ஈசனை நேருக்கு நேர் பார்த்தது. உடனே கோபம் கொண்ட மகேஸ்வரன் அந்த ஐந்தாவது தலையைத் தன் கரத்தால் கொய்தார். தலை இழந்த பிரம்மன் தன் நிலை உணர்ந்து சுதாரித்துக் கொள்வதற்குள், அவர் தலை துண்டிக்கப்பட்டு சிவன் கரத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது. தேவனானாலும், மனித குணம் தனக்குள் ஒண்டிக் கொண்டுவிட்டதன் பாவத்துக்கு, தனக்குக் கிடைத்த அந்த தண்டனை பொருத்தமானதே என்று நினைத்து அடங்கினான் பிரம்மன். ஆனால், இப்போது பிரச்னை பிரம்மனிடமிருந்து ஈசனுக்கு மாறிவிட்டது. ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் அவர் கையைவிட்டு உதிரவே மாட்டேனென்றது. அந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எப்படி விடுபடலாம் என்று அவர் யோசித்தபோது, அந்த கபாலம் நிறையும் வகையில் அவருக்கு யாரேனும் பிட்சை இட்டால், அது விலகிவிடும் என்று ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. உடனே ஈசன் அந்தக் கபாலத்தையே பிட்சைப் பாத்திரமாகக் கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்றார். அவரது பரிதவிப்பைக் கண்ட மஹாவிஷ்ணு, அவரைக் காப்பாற்ற விழைந்தார். ஈசன் திருக்கரம்பனூர் வரும்போது, அவரது கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கபாலம் நிறைய அன்னதானமிட்டு அவரை அந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்குமாறு மஹாலட்சுமியை அவர் கேட்டுக்கொண்டார். அதன்படியே மகாதேவன் இந்தத் தலத்துக்கு வந்தபோது, மஹாலட்சுமி உள்ளம் உவந்து அன்னமிட, அந்த அன்னம் கபாலத்தை நிறைக்க, பளிச்சென்று தோஷமும், கபாலமும் ஒன்றாய் விலகின; பரமேஸ்வரன் நிம்மதியடைந்தார். அந்த நிம்மதியில் இதே தலத்தில் அவர் பிட்சாடனமூர்த்தியாக அர்ச்சாவதாரமும் கொண்டார்.

இவ்வாறு மகேஸ்வரனுக்கே அன்னபூரணியாகத் திகழ்ந்த மஹாலட்சுமி, இந்தத் தலத்தில் பூரணவல்லித் தாயாராக கோயில் கொண்டிருக்கிறாள். பூரணத்துவம் மிகுந்த இந்தத் தாயார் மகாதேவனுக்கு மட்டுமல்லாமல், மாந்தர் அனைவரது வாழ்விலும் பூரண மகிழ்ச்சி நிலவ அருள்புரிகிறாள். பிரம்மஹத்தி தோஷம் ஏற்படக் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல், பிரம்மனுக்கு தனிப்பட்ட முறையில் இந்தத் தலத்துடன் தொடர்பு உண்டு. அது என்ன?ஈசனுக்கு தோஷம் விலகிய தலம் என்பதைத் தெரிந்துகொண்ட பிரம்மன், அந்தத் தலத்தின் மகிமையைத் தானும் அனுபவித்து உணர விருப்பம் கொண்டான். இயல்பாகவே மஹா விஷ்ணுவை தினமும் தொழுதேத்தித் தன் அளவிடற்கரிய பக்தியை சமர்ப்பித்த அவன், இந்தத் தலத்துக்கும் வந்தான். பரந்தாமனை வழிபட அவன் ஆயத்தம் செய்தபோது, அங்கே ஒரு கதம்ப மரம் நிற்கக் கண்டான். வழக்கமாகத் தான் வழிபடும் இடங்களில் அந்தப் பரம்பொருளே தனக்குக் காட்சி நல்க, அவருக்கு நேரடியாக பூஜை செய்து பழக்கப்பட்டுவிட்ட பிரம்மன், இங்கே அவரைக் காணாமல் முதலில் திகைத்தான். ஆனால், ஒரு பரம பக்தனின் உள்ளக்கிடக்கையை உணர்ந்த பகவான் அவனை சோதிக்க முயலலாமே தவிர, முற்றிலும் கைவிட்டுவிடமாட்டான் என்ற பேருண்மையை அறிந்திருந்த பிரம்மன், அந்தக் கதம்ப மலரை உற்று நோக்க, அங்கே அவனுடைய தெய்வம் நிலைகொண்டிருந்ததைப் புரிந்துகொண்டான். உடனே அந்த மரத்துக்குத் தன் கமண்டல நீரால் திருமஞ்சனம் செய்வித்து, பூஜைகளை மேற்கொண்டான். மகிழ்வெய்திய மஹாவிஷ்ணு, அவன் முன் பிரசன்னமாகி, ஆசியளித்தார். பிரம்மன் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்டு கதம்ப மரத்தைத் திருமஞ்சனம் செய்த நீர், அங்கேயே ஓர் தீர்த்தமாகத் தேங்கியது. அதுவே கதம்ப தீர்த்தமாக இப்போது விளங்கி வருகிறது. இதே தலத்தில் பிரம்மனும் கோயில் கொண்டான். தன் முடியைக் கண்டதாக, தாழம்பூவை சாட்சியாக வைத்து பிரம்மன் சொன்ன பொய்க்காக, பூவுலகில் பிரம்மனுக்குத் தனியே கோயிலே இருக்கலாகாது என்று சிவபெருமான் சபித்ததற்கு மாறாக, பிரம்மனை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அவனுக்கு இந்த திருக்கரம்பனூரில் ஒரு தனி சந்நதி உருவாக்கித் தந்தார்மஹாவிஷ்ணு.

மஹாலட்சுமியை அன்னபூரணியாக, பூரணவல்லித் தாயாராகக் கண்ட சிவபெருமான், இதே தலத்தில் பிட்சாடன மூர்த்தியாக நிலைகொண்டுவிட்டார். கதம்பவனமாகத் திகழ்ந்த இந்தத் திருத்தலம், கதம்பனூர் என்று பெயர் பெற்று, நாளாவட்டத்தில் கரம்பனூராக மாறிவிட்டது. இங்கே கதம்ப முனிவர் தவமிருந்து பகவான் புருஷோத்தமனின் தரிசனம் பெற்றதாலும் இந்தத் தலம் கதம்பனூர் என்று பெயர் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.பிரளயம், பிரபஞ்சத்தையே சுருட்டிக்கொண்டு மறைய யத்தனித்தபோது, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் ஓடோடிச் சென்று, பிரளய காலத்துக்குப் பிறகு தாங்கள் வாழ்வதுதான் எப்படி என்று கேட்டார்கள். அப்போது மகேஸ்வரன், ‘இப்போதே மண்ணுலகம் சென்று அங்குள்ள திருக்கதம்பனூர் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் புருஷோத்தமனின் ஆதரவைக் கோருங்கள். அவர் உங்களையெல்லாம் எந்த இன்னலும் நேராமல் காப்பார்,’ என்று அபயவழி காட்டினார். அதன்படி, இந்தத் தலத்தில் வேதங்கள் எல்லாம் கதம்ப மரங்களாகவும், ஆகமங்கள் எல்லாம் அந்த மரங்களில் விளையும் மலர்களாகவும், இதிகாசங்கள் அம்மரங்களின் கனிகளாகவும், புராணங்கள் அந்த வனத்தில் வசிக்கும் பறவைகளாகவும் மாறி இங்கேயே அப்போது முதல் இப்போதுவரை வாசம் செய்வதால், திருக்கதம்பனூர், ஒரு புனிதத் தலமாக போற்றப்படுகிறது. இந்த கரம்பனூர் புருஷோத்தமனை, கரம்பனூர் உத்தமன் என்றே பக்தர்கள் போற்றுகிறார்கள். ஏனென்றால் இந்த உத்தமனின் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதும், வேண்டியன எல்லாம் சித்தியாகும். ஆண்டாள்கூட தன் பாசுரத்தில், ‘ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாடி’ என்று சொல்லாமல், ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,’ என்று குறிப்பிட்டிருந்ததிலிருந்து இந்த உத்தமனின் பெயரை உச்சரித்து, வழிபட்டு போற்றுவது, இந்த உத்தமனைக் காட்டிலும் அவனது பெயர் உயர்வானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தமனையும், பிட்சாடனரையும், பிரம்மனையும் ஒருசேர இதே கோயிலில் வழிபட்ட முதன்மையான பெரியவர் யார் தெரியுமா? ஜனகர். ஆமாம், ராமனின் மாமனார்தான்! ஜனகர் ஒரு ராஜரிஷி. தனக்கென உரியது எத்தனையோ இருந்தாலும், அவை ஒன்றில்கூட எந்தப் பற்றும், ஆர்வமும் கொள்ளாதவராக வாழ்ந்தவர் அவர். இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றுபோலவே பாவித்தவர். எந்த உணர்வுக்கும் அடிமையாகாதவர். புதிதாகத் தோன்றும் எதையும், இதுவும் ஒருநாள் அழியப்போவதுதானே என்ற நோக்கிலேயே பார்ப்பார்; அதேபோல அழியும் எதுவும், மீண்டும் எதுவாகவோ உருவாகப்போவதுதானே என்றே சிந்திப்பார். யாகங்கள் இயற்றுவது இவருடைய கடமைகளில் ஒன்று. புனித யாத்திரை மேற்கொண்டு, தம் மனம் லயிக்கும் இடங்களில் எல்லாம் வேள்வியை மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தார் அவர். அந்தவகையில் அவர் கதம்பனூருக்கு வந்தார். ஊரின் பேரெழிலில் மனம் பறிகொடுத்த அவர், இங்கே யாகம் இயற்ற விரும்பினார். உடன் வந்தவர்களிடம் அவர் விவரம் சொல்ல, யாகத்துக்குத் தேவையான பொருட்கள் அடுத்தடுத்துத் தரவழைக்கப்பட்டன. முனிவர்களும், சான்றோர்களும், வேதவிற்பன்னர்களும் நூற்றுக்கணக்கில் குழுமினர். அமர்க்களமாக ஆரம்பித்தது யாகம். நேரம் செல்லச் செல்ல அந்த இறைப்பணியில் ஏதோ குறை இருப்பது போல பட்டது ஜனகருக்கு. சற்றே குழப்பமாகவும் இருந்தது. ஓதப்படும் வேத மந்திரங்களில் எந்தத் தொய்வும் இல்லை, கணீரென்று நூற்றுக்கணக்கான குரல்கள் சங்கமித்து ஒரே குரலாக எந்தப் பிசிறும் தட்டாதபடி ஓங்கி ஒலிக்கத்தான் செய்தது. அந்த ஒலியால் ஈர்க்கப்பட்ட புள்ளினங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் யாகசாலைக்கு வெளியே அமைதியுடன் நின்றிருந்தன. ஆனால் வேறு ஏதோ ஒரு குறை….

தன் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார் ஜனகர். மூத்த முனிவர்களிடம் தன் குழப்பத்துக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும் என்று யோசனை கேட்டபோது, அவர்கள் அந்தத் தலத்திலுள்ள கதம்ப மரத்தடிக்குச் சென்று திருக்கதம்பனூர் உத்தமனை எண்ணி தியானம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். அதன்படியே கதம்ப மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார் ஜனகர். உடனே ஓர் அசரீரி சொன்னது: ‘யாகத்துக்காக சேமிக்கப்பட்டிருந்த பொருட்களை ஒரு நாய் தீண்டிவிட்டதால், அவை அனைத்தும் தூய்மையற்றுப் போய்விட்டன; அதனாலேயே அவற்றைக் கொண்டு இயற்றப்படும் யாகம் எந்த கட்டத்திலும் நிறைவு தராமல் போகிறது. ஆகவே தூய பொருட்களை மீண்டும் சேகரித்து அவற்றால் வேள்வியை நிறைவேற்று.’உடனே ஜனகர் மாற்றுப் பொருட்களை சேகரிக்க ஏற்பாடு செய்தார். தனக்கு ஏன் இப்படி ஒரு அனுபவம் நேர வேண்டும் என்று ஒருகணம் யோசித்தார். தானோ அல்லது தன்னைச் சார்ந்த யாரோ இவ்வாறு யாகம் இயற்றுவதில் ஏதோ ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு கணத்தில் அலட்சியம் காட்டியிருப்பதன் விளைவுதான் என்பதைப் புரிந்துகொண்டார். ஆகவே யாகப் பொருட்களைத் தூய்மையானவையாக சேகரிப்பதில் காட்டும் முக்கியத்துவத்தை அவற்றை யாகம் முடியும்வரை தூய்மை கெடாமல் பாதுகாப்பதிலும் காட்டவேண்டும் என்ற அனுபவ அறிவைப் பெற்றார் ஜனகர். உடனே புத்துணர்ச்சியுடன் வேள்வித் தீ எந்தக் குறையுமின்றி வானோங்கி வளர்ந்தது. அதன் ஜ்வாலை காட்டிய பிரகாசம், ஜனகரின் மனதிலும் நிம்மதியாகப் பரவியது. பூரண ஆஹுதி இடப்பட்டபோது, அங்கே ஒரு பேரொளி தோன்றியது. ஒளியின் நடுவே புருஷோத்தமன், அதே தலத்தில் தான் கோயில் கொண்டிருக்கும் தோற்றத்தை ஜனகருக்குக் காட்டினார். தன் தோற்றம் மட்டுமின்றி, தன் நாபிக் கமலத்தில் காட்சிதரும் பிரம்மனையும், தன்னருகே பிட்சாடனராக ஈசன் அமைந்திருப்பதையும் அவருக்குக் காட்டினார்.
இந்த மும்மூர்த்திகளின் தோற்றம் கண்டு வியந்த ஜனகர், இந்த அமைப்பு, அதுவரை தான் தரிசித்து வந்த தலம் எதிலுமே இல்லாத சிறப்பைக் கொண்டாட விரும்பினார். உடனே அம்மூவர் சேர்ந்த அந்தப் பகுதியை அப்படியே முழுக் கோயிலாக உருவாக்கினார். அந்தத் தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் எல்லோரும் மனமகிழ தரிசிக்க, உத்தமன் புருஷோத்தமன் கோயில் அமைந்தது.
பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை, திருத்தண்கால்
ஊரானைக் கடம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காராண்திண் கடலேழு
மலையேழிவ் வுலகேழுண்டும்
ஆராதென் றிருந்தானைக்
கண்டதென் னரங்கத்தே.
– என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
அரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனாக, திருக்குறுங்குடி நின்றநம்பியாக, திருத்தண்கா தீபப் பிரகாசராகக் கண்ட ஆழ்வார் அந்தப் பேரருளாளனை இந்த திருக்கரம்பனூரில் உத்தமனாக தரிசிக்கிறார். புருஷோத்தமனை உத்தமனாக இவர் பாடிவைத்ததன் எதிரொலியாகத்தான் ஆண்டாளும் ‘உத்தமன் பேர் பாடி’ என்று வர்ணித்திருக்கிறாள். திருமங்கையாழ்வார் இந்தத் தலத்தில் உத்தமன் புருஷோத்தமனை ரங்கநாதனாகவே பாவித்து வணங்கியிருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், இங்கே தங்கியிருந்துதான், திருவரங்கத்தில் மிகச் சிறந்த மதில் திருப்பணியை அவர் மேற்கொண்டார். அந்தப் பணியின் தினசரி வளர்ச்சியைக் கண்டு, கோயில் மேம்பட உரிய யோசனையையும், உதவியையும் அவர் அளித்தார். மதில் திருப்பணி முற்றுப்பெறும்வரை அவர் இந்தத் திருக்கரம்பனூரிலேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதம்ப புஷ்கரிணியின் வடக்கே உள்ள தோப்பும், நன்செய் நிலமும், எழில்மிகுந்த சோலையும் இன்றும் ‘ஆழ்வார் பட்டவர்த்தி’ என்றழைக்கப் படுகிறது இப்பகுதியில் தங்கியிருந்த திருமங்கையாழ்வாரை நினைவுகொள்ளும் வகையாக. கரம்பனூர் உத்தமன் என்ற சொற்றொடரை, ‘வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவு இடாதெ கிடக்கிறவன்’ என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் தருகிறார். அதாவது அவர் காலத்தில் இந்த உத்தமர் கோயிலுக்குக் கதவே இல்லாமலிருந்தது. பயணிகள் போய்த் திரும்பும் வழியாக இருந்ததால், அவர்கள் அனைவரும் கதவு என்ற தடையை சந்திக்காமல், தன்னை வந்து தரிசிக்குமாறு உத்தமனே தன் கோயிலுக்குக் கதவு இல்லாமல் இருந்திட செய்துவிட்டானாம்! திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தங்கி தன் கோயிலின் திருப்பணியை மேற்கொண்டதைச் சிறப்பிக்கும் வகையில் ரங்கநாதர், ஆண்டுக்கு ஒருமுறை கதம்பனூருக்கு எழுந்தருளி, கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தவாரி காண்கிறார்!

இந்தக் கோயில், பிட்சாண்டார் கோயில் என்று சிவனை முன்னிலைப்படுத்தியும் அழைக்கப்படுகிறது. கோயிலினுள் நுழைந்தால் இடது பக்கம் பூர்ணவல்லித் தாயார் முதல் தரிசனம் தருகிறார். சிவபெருமானுக்குக் கைக் கபாலம் நிறைய உணவிட்ட இந்த அன்னை இந்தக் கோயிலுக்குள் வரும் எல்லா பக்தர்களுக்கும் வாழ்வில் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் போகச் செய்து அருள்கிறாள். அன்னமிடும் அந்த அன்னையின் முகம் தாய்மை பொங்க ஒளிவிடுகிறது. வடக்கே காசியில் ஓர் அன்ன பூரணி என்றால், தெற்கே இந்த பூர்ணவல்லித் தாயார்.அடுத்து மிகச் சிறு சந்நதியில் சிவகுரு தட்சிணாமூர்த்தி கொலுவிருக்கிறார். இவருக்கு அருகில் பிட்சாண்டவர். அருகில் இரட்டை விநாயகர், பால லிங்கம், லட்சுமி நாராயணர், ராமர்,சீதை,லட்சுமணர்,அனுமன் சந்நதிகள். சற்றுத் தள்ளி காணப்படும் சௌந்தர்ய பார்வதி அம்மன் நந்தவனம், பசுமை போர்த்திக்கொண்டிருக்கிறது. அடுத்து பிரதான மூலஸ்தானத்தில் பிட்சாண்டவரை தரிசிக்கலாம். அடுத்தடுத்து உற்சவ மூர்த்திகள், நால்வர், மஹா கணபதி, சிவலிங்கம், முருகன், வேணுகோபாலன், நவகிரகம், தசரத லிங்கம், பிரம்மன், ஞான சரஸ்வதி என்று தெய்வங்கள் பேரருள் புரிகின்றன.இந்த சந்நதிப் பட்டியலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, சைவமும், வைணவமும், அடுத்தடுத்து தம் ஒற்றுமையைப் பறைசாற்றுவதைத்தான். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டத்தான் சந்நதியிலோ, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள கள்வன் சந்நதியிலோ பார்க்க முடியாத வைணவப் பெருமக்களை இந்தக் கோயிலில் காண முடிகிறது. பொதுவாகவே திருச்சி மாவட்டத்திலுள்ள திவ்ய தேசத் திருத்தலங்கள் ஆறிலுமே சைவ அம்சம் காணப்படுவது அந்த பெருமாளின் உள்ளக் கிடக்கை என்றே கருதத் தோன்றுகிறது.

கோயிலின் தலவிருட்சம், கதலி வாழை மரம். பலவகை மரங்கள் கொண்ட கதம்ப வனத்தில் இந்த கதலி வாழை மரமும் ஒன்று. பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்படும் எளிய நிவேதனப் பொருளாகக் கதலி வாழைப்பழம் உதவியதால், இந்த மரத்தினையே தன் தல விருட்சமாக புருஷோத்தமன் அங்கீகரித்திருக்கிறார் போலிருக்கிறது!நிறைவாக புருஷோத்தமன் சந்நதியை அடைகிறோம். புஜங்க சயனனாக, ஏகாந்தமாக பள்ளி கொண்டிருக்கிறார் பரந்தாமன். குறுநகை நம் கர்வத்தை எள்ளி நகையாடுகிறது. ‘இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ என்று பட்டினத்தார் பாடியதற்கேற்ப, ‘குழப்பங்களும், அமைதியின்மையும் கொண்டு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஏங்கி அலையும் ஆன்மாக்களே, என்னை நாடி என் அருளால் எல்லா வளமும் பெறுங்கள்’ என்று ஆறுதலளிக்கிறது அந்தக் குறுநகை. ஜனகரின் குழப்பத்தையே தீர்த்து வைத்தவரல்லவா! சந்நதியில் வழங்கப்படும் தீர்த்தமும், துளசியும், சடாரி ஆசிர்வாதமும் மன அழுக்கையெல்லாம் உருக்கி வெளியேற்ற, நல்நம்பிக்கையுடன் நிமிர்ந்த உள்ளத்தால் புதுத் தெம்பு பெற முடிகிறது என்பது அனுபவ பூர்வமான உண்மை.

இந்த உத்தமர் கோயிலை குருமஹா சந்நிதானம் என்றே அழைக்கலாம். அந்த வகையில் அநேக குருமார்கள் இங்கே நமக்காக தரிசனம் நல்கக் காத்திருக்கிறார்கள். யார் அந்த குருமார்கள்? இறைப் பேரருளாளர்களே, அவர்கள்: பிரம்ம குரு, விஷ்ணு குரு (வரதராஜப் பெருமாள்), சிவ குரு (தட்சிணாமூர்த்தி), சக்தி குரு (சௌந்தர்ய பார்வதி), ஞான குரு (சுப்ரமண்யர்), தேவ குரு (பிரஹஸ்பதி), அசுர குரு (சுக்கிராச்சார்யார்)! ரங்கம் போல பிரமாண்டமானதாக, விஸ்தாரமானதாக இல்லாவிட்டாலும், அநேக கடவுளர்களின் வடிவங்கள் நம்மை நின்று நிதானித்து வழிபட்டுச் செல்ல வைக்கின்றன. மூலவர் உத்தமர், தன் பெயருக்கேற்றார்போல சைவத்தையும் அரவணைத்துச் செல்லும் அற்புதக் கடவுளாகவே திகழ்கிறார்.

எப்படிப் போவது: சென்னை – திருச்சி ரயில் பாதையில் திருச்சிக்கு முன்னால் உள்ள ஒரு சிறு ரயில் நிலையம் திருக்கரம்பனூர். ரங்கம் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. நிறைய பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் மதியம் 12 மணிவரை; மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை
முகவரி: அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் திருக்கோயில், உத்தமர் கோயில், மணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோயில், திருச்சி மாவட்டம் – 621 216
தியான ஸ்லோகம்

மத் யுத்தம பத்தநேது பகவாந் உத்யோக வைமாநிக:
ச்லாக்யே புண்ய கதம்ப தீர்த்த விலஸத் தீரேஹி சாயி ஸுகம்
நாம்நா சோர்வரயா யா ஸஹ ஸதா கேலீபர: கேவலம்
ப்ராசீதிக் வதன: கதம்பவரதோ
விஷ்ணுஸ்ஸ ஸர்வோத்தம:

The post திருக்கரம்பனூர் புருஷோத்தமப் பெருமாள்!! appeared first on Dinakaran.

Tags : Brahman ,Ishvara ,Brahmin ,
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்