×

சாலைக் கிராமத்தில் இடியும் நிலையில் செவிலியர் குடியிருப்பு

இளையான்குடி,பிப்.16: சாலைக்கிராமத்தில் உள்ள செவிலியர் குடியிருப்பு வீடுகள் அனைத்தும் இடியும் நிலையில் உள்ளது. அதனால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1976ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிறு சிகிச்சை மற்றும் அவசர கால முதலுதவி பெற்று வருகின்றனர். மேலும் 24 மணி நேர பிரசவ வார்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

பகல் மற்றும் இரவு நேர பணியில் செவிலியர்கள், அலுவலர்கள் குடும்பத்துடன் சுகாதார நிலைய குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர். சுமார் நாற்பதாண்டு கால செவிலியர் குடியிருப்பு கட்டிடம் தற்போது பக்கவாட்டு சுவர் மற்றும் கான்கிரீட் பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளது. குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், இங்கு பணியாற்ற வரும் செவிலியர்கள் உடனடியாக மாறுதலாகிச் சென்று விடுகின்றனர்.  இல்லையேல் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

மேலும் குடியிருப்பு மற்றும் சுகாதார நிலையத்தை சுற்றி கருவேல மரங்கள் மற்றும் புல், புதர்கள் வளர்ந்துள்ளது. அதனால் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் வீட்டிற்குள் படையெடுத்து வருகிறது. அதனால் பணியிலிருக்கும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். தற்போது எம்பி நிதியில் ரூ.1.24 லட்சம் மதிப்பில், சாலைக்கிராமம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பற்ற, இடியும் நிலையில் உள்ள செவிலியர்கள் குடியிருப்பை அகற்ற வேண்டும். பின்னர் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலைக் கிராமத்தில் இடியும் நிலையில் செவிலியர் குடியிருப்பு appeared first on Dinakaran.

Tags : Salay village ,Ilayayankudi ,
× RELATED இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்