×

மாவோயிஸ்ட் நடமாட்டம் வன எல்லை வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

 

கோவை, பிப்.16: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் மாவோஸ்ட் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. செக்போஸ்ட், வன எல்லைப்பகுதி ரோடு, வனப்பகுதி கிராமங்கள் (ஷெட்டில்மெண்ட்) போன்றவற்றில் போலீசார் போதுமான கண்காணிப்பு பணிகளை நடத்துவதில்லை. 4 மாவட்டங்களில் சுமார் 600 வன கிராமங்கள் இருப்பதாக தெரிகிறது.

மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டிற்குள் தேன், திணை, வன பொருட்கள் சேகரிக்க சென்று வருகின்றனர். இவர்களுக்கு வனத்தின் பல்வேறு பகுதிகள், புதிய நபர்கள் குறித்த விவரங்கள் தெரிந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கோவை மண்டல வன எல்லை பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. ஆனால், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் போதுமான அளவு கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை.

புதிய நபர்கள் காட்டிற்குள் வந்து சென்றார்களா?, ஏதாவது இடங்களில் பதுங்கி இருக்கிறார்களா? என போலீசார் கிராம மக்களிடம் தகவல் கேட்டு விசாரிக்க நக்சல் தடுப்பு போலீசார் முன் வராமல் விட்டு விட்டதாக தெரிகிறது. அட்டபாடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட் கோவை மாவட்டத்தில் ஆனைகட்டியில் சிக்கினார். இதில் ஒருவர் தப்பினார்.

கோவையை சேர்ந்த 3 பேர் கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் மாநில எல்லை கடந்து கோவை, நீலகிரி வனப்பகுதியில் புகுந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிகளை தயார் செய்யும் பணி நடக்கிறது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் பகுதியில் வாக்கு சாவடிகளை சென்சிடிவ் பகுதியாக அறிவித்து அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தேர்தல் நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

The post மாவோயிஸ்ட் நடமாட்டம் வன எல்லை வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Maoist movement ,Coimbatore ,Maoist ,Tirupur ,Erode ,Nilgiri ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...