×

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ெதாடக்கம்

திருப்போரூர், பிப்.16: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டம் 21ம் தேதியும், திருக்கல்யாணம் உற்சவம் 27ம் தேதியும் நடக்க உள்ளன. திருப்போரூர் கந்தசாமி கோயிலின் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் மாசி மாதம் 13 நாட்கள் நடைபெறும். இந்த, ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு விநாயகர் உற்சவமும், பெருச்சாளி வாகன வீதிஉலாவும் நடைபெற்றன.

விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியான பிரம்மோற்சவ விழா நேற்று காலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி, கோயில் முன்பு இருந்த கொடிமரத்தில் கொடியேற்றினர். பின்னர், தொட்டி உற்சவ வீதியுலாவும், இரவு 7 மணிக்கு கிளி வாகன வீதியுலாவும் நடைபெற்றன. இதனையடுத்து, 16ம் தேதியான இன்று தொட்டி உற்சவமும், இரவு பூத வாகன வீதி உலாவும், 17ம்தேதி புருஷாமிருக உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்ன வாகன வீதி உலாவும், 18ம் தேதி ஆட்டுக்கிடா வாகன உற்சவமும், இரவு வெள்ளி மயில் வாகன வீதியுலாவும், 19ம் தேதி மங்களகிரி உற்சவமும், இரவு தங்கமயில் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும், 20ம் தேதி பகல் தொட்டி உற்சவமும், இரவு யானை வாகன வீதியுலாவும் நடைபெறவுள்ளன.

விழாவின், முக்கிய விழாவான தேரோட்டம் 21ம் தேதி காலை 9 மணியளவில், தேரடியில் தொடங்கி நான்கு மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சியின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேர் வடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று இரவு மங்கள சாசன உற்சவம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, 22ம் தேதி தொட்டி உற்சவமும், அன்று மாலை ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறவுள்ளன. 23ம் தேதி விமான உற்சவமும், சிம்ம வாகனத்தில் ஆறுமுக சுவாமி அபிஷேகம் மற்றும் வீதியுலாவும், 24ம்தேதி காலை வெள்ளி தொட்டி உற்சவமும், பகல் 12 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் அன்று இரவு குதிரை வாகனத்தில் அவரோகனம், மவுன உற்சவமும், சண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகின்றன.

25ம் தேதி மாலை கிரிவல உற்சவம், இரவு பந்தம்பரி உற்சவம், கிரிவலப்பாதையில் உள்ள மண்டபத்தில் மண்டகப்படியும் நடக்கிறது. 26ம் தேதி மாலை வேடர்பரி உற்சவமும், 27ம்தேதி காலை 7.30 மணிக்கு வள்ளியை முருகப்பெருமான் மணம் புரியும் திருக்கல்யாண உற்சவமும், தங்க மயில் வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்று பிரம்மோற்சவ விழா நிறைவுறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.

கொடி மரக்கயிறு உருவாகும் கதை: மாசி மாத பிரம்மோற்சவத்தின்போது விழா தொடங்குவதன் அடையாளமாக கொடியேற்றம் நடைபெறும். இந்த, கொடியேற்றத்தின்போது கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடி மற்றும் அதை ஏற்றப்பயன்படும் கொடிக்கயிறு ஆகியவை திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்களால் தயாரிக்கப்பட்டு. ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது. செம்பாக்கம் கிராமத்தில் வீர சைவ பத்தர் மற்றும் செங்குந்த முதலியார் என்ற இரு பிரிவினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இரு பிரிவினருமே நெசவுத் தொழிலை செய்து வருபவர்கள். இதனால், இருவருமே தாங்கள் தான் கோயிலுக்கு கொடிக் கயிறு செய்து தருவோம் என்று உரிமை கொண்டாடினர்.

இதையடுத்து, கோயில் ஆதீனம் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒருமுறை செங்குந்த முதலியார்களும், அடுத்த ஆண்டு வீர சைவ பத்தர் பிரிவினரும் செய்து வர வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று வரை பாரம்பரியமாக வழங்கி வருகின்றனர். எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்தாலும் இன்று தேதி வரையில் கைகளால் ராட்டை மூலம் நூல் நூற்றப்பட்டு இந்த கொடி கயிறும், கொடியும் தயார் செய்யப்பட்டு கோயிலுக்கு வழங்கப்படுகிறது.

400 ஆண்டுகளுக்குப்பிறகு களைகட்டிய பிரம்மோற்சவம்
குன்றத்தூர்: குன்றத்தூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும், பிரசித்தி பெற்றதும், தெய்வ புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற தலமாக சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு, பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கு அமைந்துள்ள கொடி மரத்தில் வேல், மயிலுடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர் ஆகியவை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று `அரோகரா, அரோகரா’ கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த, பிரம்மோற்சவ விழாவானது (15ம் தேதி) நேற்று முதல் தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் தேர் வீதியுலா முதல் முறையாக நடைபெறவுள்ளது. 400 ஆண்டுகளுக்கு பிறகு, முருகன் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா முதல் முறையாக நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில், அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர்  கன்னிகா ஆகியோர் மேற்கொண்டனர்.

The post திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ெதாடக்கம் appeared first on Dinakaran.

Tags : Massi Brahmotsavam ceremony ,Tiruporur Kandasamy Temple ,Tiruporur ,Masi Brahmotsavam ,Thorottam ,Thirukalyanam Utsavam ,Brahmotsavam ,Tiruporur Kandaswamy Temple ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ