×

மனுநீதி நாள் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

கூடுவாஞ்சேரி, பிப்.16: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மனுநீதி நாள் திட்ட முகம் நேற்று நடந்தது. இதில், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா  சீனிவாசன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி அனைவரும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கலந்துகொண்டு மனுநீதி நாள் திட்ட முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், அரசின் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் இதுபோன்ற முகாம்களில் பங்கேற்பதில்லை. இதனால், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை. எனவே, எந்த ஒரு முகாம்களாக இருந்தாலும் கிராமங்கள் தோறும் சென்று முதலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார். இதனை அடுத்து அவர் முதியோர் விதவை, நலிந்தோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், பட்டா நகல், உட்பிரிவு பட்டா, குடும்ப அட்டை, சக்கர நாற்காலிகள், கடனுதவி, தையல் இயந்திரம், ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது நெடுங்குன்றத்தை சேர்ந்த பெண் மற்றும் விவசாயி ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அப்போது, மாவட்ட கலெக்டரிடம் அந்த பெண் கூறுகையில், ‘விவசாயம் செய்வதற்கு ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரி கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் வண்டலூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை 21 முறை மனு கொடுத்துள்ளேன். அந்த மனுக்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் மனுக்களை வாங்கினார். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

புழுதி நிறைந்த சாலை
செங்கல்பட்டு மாவட்டம், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தை சேர்ந்த கஜா (எ) கஜேந்திரன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனுநீதி நாள் முகாமில் கொடுத்தார். அந்த மனுவில், ‘வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள வெங்கப்பாக்கம் கூட் ரோட்டில் உயர் கோபுர விளக்குகள் அமைத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. மேலும், நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் மரண பள்ளங்களும், சாலையோரத்தில் மண் குவியல்களும் காணப்படுகிறது. இதனால், சாலை முழுவதும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புழுதி நிறைந்த சாலையாக காட்சியளிக்கிறது. மேலும், அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளில் பல உயிர்கள் பலியாகி வருகிறது. எனவே, இதுகுறித்து கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

The post மனுநீதி நாள் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Peace Day Project ,Mudravancheri ,Human Justice Day Project ,Kolpakak, Chengalpattu District, Vandalur ,Vanita Sinivasan ,Ledunguram Uradachi Association ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே...