×

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளருக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு, பிப்.16: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நெரும்பூர் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் காசிம் உசேன். இவர் கல்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் சித்தப்பா மகன் அருண்குமார் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார். அரசிடமிருந்து உதவி தொகை பெறுவதற்காக அருண்குமாரின் வாரிசு சான்று கோரி முருகேசன் மற்றும் அவரது மனைவி எழில்பாவை ஆகியோர் விண்ணப்பம் அளித்திருந்தனர். இது சம்மந்தமாக அசோக்குமார் வருவாய் ஆய்வாளர் காசிம் உசேனிடம் சென்று கேட்டுள்ளார். வாரிசு சான்று ₹1500 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்ச பணம் கொடுக்க விருப்பம் இல்லாத அசோக்குமார் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3.12.2013 அன்று காசிம் உசேன் லஞ்சப் பணம் பெறும்போது கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் மீதான புலன் விசாரணை முடிக்கப்பட்டு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவர் மன்றத்தில் காசிம் உசேன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தனர். இந்த வழக்கு நேற்று இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற விசாரணை முடித்த முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவர் காசிம் உசேன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்து. காசிம உசேனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், அபராத தொகை கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

The post வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளருக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kasim Hussain ,Nerumbur Birka ,Tirukkalukunram ,Chengalpattu district ,Arunkumar ,Ashokumar ,Kalpakkam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...