×

பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு மெட்ரோவில் ‘பிங்க் படை’ அறிமுகம்

சென்னை, பிப்.16: ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுத்து, பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் பிங்க் படையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்தில், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், பாதுகாப்புக் குழுவில் பிங்க் படை பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இதுகுறித்து மேலாண்மை இயக்குநர் சித்திக் அளித்த பேட்டி: மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பை வழங்கி வருகிறது. இதுதவிர ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் ‘பிங்க் படை’ அணியை நியமித்துள்ளது.

மேலும் ‘பிங்க் படை’ உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிகளவில் பயணிகள் செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ போன்ற இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ச்சுனன் (திட்டங்கள்), முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு மெட்ரோவில் ‘பிங்க் படை’ அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Pink Squad ,Metro ,CHENNAI ,Metro Rail ,Chennai Metro Rail ,Nandanam ,Pink ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...