×

கழிவு எண்ணெய், டயர் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

கும்மிடிப்பூண்டி, பிப். 16: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பழைய டயர்களை வாங்கி அந்த டயர்களை மறு சுழற்சி செய்து அதில் இருந்து ஆயில் உற்பத்தி மற்றும் டயர் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் ஆயில் உற்பத்தி மூலப் பொருட்களில் சுமார் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக சரியான நேரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சுமார் அரை மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், அதிக வெப்பத்தினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் கனரக இயந்திரங்களும் எரிந்து சேதமாகியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சிப்காட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கழிவு எண்ணெய், டயர் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Chipkot Industrial Estate ,Chipgat ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...