×

விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள் சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை ஒடுகத்தூர் அருகே அதிகாலை பரபரப்பு

ஒடுகத்தூர், பிப்.16: ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் அதிகாலை விவசாய நிலங்களில் புகுந்த காட்டெருமைகள் வாழை, நெல், போன்ற பயிர்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாதபடி சோலார் மின்வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றிகள், குரங்குகள், பாம்புகள் போன்ற வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்நிலையில் வரதலம்பட்டு, கீழ்கொத்தூர், முத்துகுமரன் மலை, வண்ணாந்தாங்கல், மேலரசம்பட்டு, தீர்த்தம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் வனப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி கிராமங்களில் நுழைந்து விடுகிறது. அப்போது விவசாய நிலங்களில் உள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மேலரசம்பட்டு கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, கரும்பு போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். காடுகளையொட்டி அமைந்துள்ள இப்பகுதிக்கு அடிக்கடி வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இதேபோல் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் 3 காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிரிடப்பட்டிருந்த நெல் நாற்று, வாழை, உளுந்து போன்ற பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனை கண்ட விவசாயிகள் சத்தம் போட்டு காட்டெருமைகளை விவசாய நிலத்தில் இருந்து காட்டுக்குள் விரட்டியுள்ளனர். இருந்த போதிலும் புதிதாக பயிரிடப்பட்டிருந்த நெல் நாற்றுக்களை அதிகளவில் சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மேலரசம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டெருமைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது தொடர்கதையாகி விட்டது. இதற்கு முன்னதாகவே பல முறை இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அப்போதெல்லாம் வனத்துறையினர் காடுகளை சுற்றி சோலார் மின்வேலி அமைப்பதாக கூறிவிட்டு அதனை செயல்படுத்தாமலேயே கிடப்பில் போட்டுள்ளனர். இனியாவது, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதபடி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மின்வேலியை விரைந்து அமைக்க வேண்டும். அதேபோல் தற்போது பயிர்கள் சேதமடைந்ததற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

The post விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள் சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை ஒடுகத்தூர் அருகே அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Melarasampattu ,Vellore district ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...