×

சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்த சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. 2023-24ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017 ஜூன் 8ம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருமென்று 2023 மார்ச் 30ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று அவற்றை ஆய்வுசெய்து பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்த சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...