×

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும்: ஊர்வசி அமிர்தராஜ் கேள்விக்கு அமைச்சர் பதில்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஸ்ரீவைகுண்டம் செ.ஊர்வசி அமிர்தராஜ்(காங்கிரஸ்): அண்மையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. நம் அரசாங்கம் மிக சிறப்பாக செயல்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு நன்றி. அரசு அறிவித்த நிவாரணங்களை விரைவாக அங்கு செயல்படுத்த வேண்டும். எங்களுடைய தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரத்தில் உள்ள கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், நவதிருப்பதி தலங்களில் ஒன்று. சித்திரை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் 50 ஆண்டாக தேரோட்டம் நடைபெறாமல் தேர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தேரை சரி செய்து மீண்டும் தேரோட்டத்தை நடத்த அரசு முன்வருமா?

அமைச்சர் சேகர்பாபு: இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய தேர்கள் உருவாக்கும் பணிகளும், ரூ.7.83 கோடியில் 41 திருக்கோயில்களின் பழுதடைந்த திருத்தேர்களை மரமாத்து செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் புராதன சின்னங்களாக விளங்குகின்ற திருக்கோயில்களின் திருத்தேர்களை பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளார். உறுப்பினர் கூறிய திருக்கோயில் போதிய நிதி ஆதாரம் இல்லாத கோயிலாக இருந்தாலும், சுமார் ரூ.1.16 கோடியில் புதிய திருத்தேர் உருவாக்குவதற்கு அனைத்து நிலையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உறுப்பினர் மனது வைத்து, ரூ.1.16 கோடியை உபயதாரர் நிதியாக வழங்கி திருத்தேர் பணிகளை தொடங்குவதாக தெரிவித்தால் இந்த மாத இறுதிக்குள் அனைத்து உத்தரவுகளையும் வழங்கி உங்களோடு நானும் இணைந்து, திருத்தேர் திருப்பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்: அரசே முன்வந்து அதை மேற்கொள்ள வேண்டும்.

* கிராமப்புற ஆதிதிராவிடர், பழங்குடியினர் பகுதியில் 7,500 கோயில்களின் திருப்பணி நடந்துள்ளது: கு.பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கீழ்பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி(திமுக: துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வேடந்தவாடி ஊராட்சி, ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள ஆண்டவர் பெருமாள், விநாயகர் அம்மன் கோயில் நிதி இல்லாமல் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக கிராம கோயில்கள் புனரமைப்பு நிதியிலிருந்து நிதி விடுவிக்கப்பட வேண்டும். அதேபோல செங்கம், நீப்பத்துறை பெருமாள் கோயிலில் புதிய கல்யாண மண்டபம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: திருப்பணி செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கையை 1,000 லிருந்து 1,250 ஆக உயர்த்தப்பட்டன. மேலும், நிதியுதவியை ரூ.1 லட்சத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்வர் வழங்கினார். அதோடு 2021 -2022ம் ஆண்டு அறிவிப்பின்படி 2,500 கோயில்களுக்கு ஒரே தவணையாக ரூ.50 கோடியை பெரும் விழாவாக நடத்தி வழங்கினார். அதேபோல 2022-2023க்கு 2,500 கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ரூ.50 கோடி வழங்கி, சொன்னதை செய்கின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கின்றார்.

2023-2024ம் நிதியாண்டிற்கான 2,500 கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குண்டான காசோலைகளும் தயார் நிலையில் இருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 7,500 திருக்கோயில்களின் திருப்பணி நடைபெற்ற வரலாறு இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடந்திருக்கிறது. உறுப்பினர் கோரியுள்ள விநாயகர், அம்மன் கோயில் திருப்பணிக்கு நிதியுதவியாக ரூ.2 லட்சம் காசோலையாக வழங்கப்படும். பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்டுவற்கு முதல்வர் அனுமதியோடு இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் எடுத்துக் கொள்ளப்படும்.

The post ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும்: ஊர்வசி அமிர்தராஜ் கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Srivaikundam Kailasanathar Swamy Temple ,Minister ,Urvashi Amritraj ,Srivaikundam ,Sr. ,Urvashi Amirtharaj ,Congress ,Srivaikundam Kailasanathar ,Swamy ,temple ,Urvashi Amirtaraj ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...