×

நலிந்த பிரிவினர்களுக்கு சேவை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம்: சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றம்

வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதால், ஊராட்சி நிறுவனங்கள் சில பணிகளை கூடுதலாக செய்யும் வகையில் 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் உட்பிரிவில் சில திருத்தம் செய்வதற்கான சட்டமுன் வடிவு பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: ஊராட்சிகளில் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும், வறுமையை போக்குவதற்கும், கல்வியறிவின்மையை அகற்றுவதற்கும், வாழ்க்கை தேவைகளை மேம்பட்ட தரத்திற்கு மாற்றுவதற்கான நிறுவனமாக ஊராட்சிகள் மாற்றப்பட வேண்டும். இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அரசியலமைப்பின்படி ஊராட்சி சுயாட்சி நிறுவனங்களாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான அதிகாரங்களையும் ஆணை உரிமையும் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்கு சட்டத்தின் மூலம் செயல்படுத்த மாநில சட்ட மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், பொருளாதார மேம்பாடு, சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டம் 21 செயற்பணிகளை பட்டியலிட்டுள்ளது. தற்போதைய தேவைக்கு ஏற்ப கூடுதல் செயற்பணிகளை குறிப்பிடுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, குடிசை தொழில்களை முன்னேற்றுவதற்கும், குடியிருப்பவர், குழுவாக குடியிருப்பவர்கள், நலிந்த பிரிவினர்கள், பெண்கள், குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, அவ்வப்போது அரசு உருவாக்கும் திட்டங்களுக்குக் கூடுதலாக வீட்டு வசதி, ஊட்டச்சத்து, சுகாதாரம், குடும்ப நல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், தேவையான சேவைகளை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஊராட்சிகளுக்கும், வட்டார ஊராட்சி மன்றத்திற்கு பொருந்தும். இந்த சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

The post நலிந்த பிரிவினர்களுக்கு சேவை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம்: சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Assembly ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...