×

கத்தார் அரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு: சிறையிலிருந்து 8 இந்தியர்களை விடுவித்ததற்கு நன்றி

தோஹா: கத்தார் அரசர் தமிம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து பேசியதோடு 8 இந்தியர்களை விடுவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2 நாள் பயணத்தை முடித்த பின் பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு கத்தார் வந்தடைந்தார்.

தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை சந்தித்தார்.அப்போது இருவரும் ஆலோசித்தனர். இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி, கத்தார் அரசர் தமிம் பின் ஹகமத் அல் தானியை சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது.கத்தாரில் இந்திய சமூகத்தின் நலனை பாதுகாப்பதற்காகவும், சிறையில் இருந்து 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுவித்ததற்கும் கத்தார் அரசருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் தனது கத்தார் பயணத்தை முடித்துக்கொண்டார். முன்னதாக பிரதமர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘கத்தார் பயணமானது இந்தியா-கத்தார் நட்புறவில் புதிய வீரியத்தை சேர்த்துள்ளது. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இந்தியா எதிர்நோக்கியுள்ளது. விருந்தோம்பலுக்கு கத்தார் அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோஹாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புலம்பெயர் இந்தியர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டு இருந்தார். மேலும் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு இருந்தார்.

The post கத்தார் அரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு: சிறையிலிருந்து 8 இந்தியர்களை விடுவித்ததற்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Doha ,King ,Tamim bin Hamad Al Thani ,Indian Navy ,Qatar ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...