×

தமிழ் வளர்ச்சிக்கு எடுக்கப்படும் நடவடிக்கை திருப்தியாகவுள்ளது: அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தியாக உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும், அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ் வளர்ச்சிக்காக அரசு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆராய்ச்சிக்காக 1971லேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சித் துறையில் 2020-21ல் 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 53 கோடியே 86 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, அரசு பதில் மனு திருப்தி அளிக்கிறது இதில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

The post தமிழ் வளர்ச்சிக்கு எடுக்கப்படும் நடவடிக்கை திருப்தியாகவுள்ளது: அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu government ,Advocate ,C. Kanagaraj ,World Tamil Research Foundation ,Court ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...