×

தண்ணீர் வாங்கி குடித்தவனுக்கு திடீர் விபரீத புத்தி தகாத உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த பிளஸ் 2 மாணவன்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தகாத உறவுக்கு அழைத்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள இருப்பாளி ஊராட்சி குருக்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பெருமாயி (55). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மாணிக்கம் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்குத் திருமணமாகி விட்டது. இதனால் பெருமாயி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 12ம் தேதி காலை பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் சடலமாக கிடந்த பெருமாயியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், பெருமாயின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி, சந்தேகத்தின் அடிப்படையில் குருக்கப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அதில் அவன் பெருமாயியை கொலை செய்ததை ஒப்பு கொண்டான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சம்பவத்தன்று பெருமாயி வீட்டில் சிறுவன் தண்ணீர் வாங்கி குடித்துள்ளான். அதன் பிறகு பெருமாயியை தகாத உறவுக்கு அழைத்துள்ளான். அதற்கு பெருமாயி ஆத்திரமடைந்து சிறுவனை அறைந்து, இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து விடுவேன் என சைகையில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் பெருமாயியை கீழே தள்ளி, அவரது தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளான். சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறான். கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்லாமல் சுற்றி திரிந்து வருகிறான். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

The post தண்ணீர் வாங்கி குடித்தவனுக்கு திடீர் விபரீத புத்தி தகாத உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த பிளஸ் 2 மாணவன் appeared first on Dinakaran.

Tags : Salem District Midthipadi ,
× RELATED மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை...