×

பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்கள் அகற்றம்

பெரம்பூர்: சென்னையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நடத்தவுள்ள ‘’என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன்காரணமாக யாத்திரையை பொதுக் கூட்டங்களாக மாற்றி விட்டனர். ஏற்கனவே சென்னை மின்ட் பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை வரவழைத்து பொதுக்கூட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் பெரம்பூர், திருவிக.நகர், கொளத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இன்று மாலை கொளத்தூர் அகரம் சந்திப்பில், ‘’என் மண் என் மக்கள்’’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக பெரம்பூர் சந்திப்பில் இருந்து கொளத்தூர் அகரம் சந்திப்பு வரை சுமார் 15க்கும் மேற்பட்ட பேனர்கள் நேற்றுமுன்தினம் இரவு பாஜகவினர் வைத்திருந்தனர். இதற்கு போலீசாரின் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. பேனர் வைத்த நிர்வாகிகளிடம் காவல்துறை சார்பில் விளக்கம் கேட்டபோது, அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. அத்துடன் பேனர்களை வைப்பதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருவிக. நகர் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் செம்பியம், திருவிக. நகர் காவல் துறையுடன் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வைத்திருந்த 15 பாஜக பேனர்களை அப்புறப்படுத்தினர். மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அதன் பிறகு பேனர்களை வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

நேற்றிரவு பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் பகுதியில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் அகரம் சந்திப்பு மற்றும் ரெட்டேரி சந்திப்பு வரை பாஜகவினர் 150க்கும் மேற்பட்ட பேனர்களை நேற்றிரவு வைத்துள்ளனர். இதுபற்றி போலீசார் கேட்டபோது பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை முதலே சுமார் 100க்கு மேற்பட்ட போலீசார் நிகழ்ச்சி நடைபெறும் அகரம் சந்திப்பு பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலைக்கு கருப்புக்கொடி
அண்ணாமலை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில் கருப்பு கொடி காட்ட தயாராகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பரபரப்பு நிலவுகிறது.

The post பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Perampur ,Kolathur ,En Mann En Mun En Miha ,Padayathira ,Naga ,Annamalai ,Chennai ,J. B. Summon Nata ,Perampur, Kolathur ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...