×

திருக்கூடல் கூடலழகர்

மதுரை என்றால் மீனாட்சி அம்மை நம் நினைவுக்குள் தாமே நுழைந்துகொள்வார். மீன் போன்ற கண்களால் கருணையுடன் நோக்கும் அன்னை என்ற பொருளில் மீனாட்சியாக மதுரையில் கோலோச்சி வருகிறாள் அம்பிகை. இந்த மீன், திருக்கூடல் என்ற இந்த தலத்தில் வைணவக் கோலமும் பூண்டிருக்கிறது. புராண காலத்தில் பெருமாள் மேல் பேரன்பு கொண்ட சத்திய விரதன் என்ற பாண்டிய மன்னன், அவரை நோக்கி தவம் மேற்கொண்டான். வெறும் திருவாராதன தீர்த்தத்தை மட்டுமே பருகி, வேறு உடல் சுகம் எதையும் சிந்தித்தும் பார்க்காத கடும் விரதம் அது. அப்போது மச்சாவதாரம் எடுத்திருந்த நாராயணன், அந்த மன்னனைச் சற்று சோதிக்க விருப்பம் கொண்டார். ஒருநாள், அந்தி வேளையில் அவன் வைகை நதியில் ஜல தர்ப்பணம் செய்தபோது, தன் இரு கரங்களைக் குவித்து நீரை முகந்து எடுத்தான். அவன் கரங்களில் சிறு மீன் ஒன்று மிகுந்த ஒளியுடன் தன் வாலை வளைத்துச் சுழற்றி அங்கும் இங்குமாக நீந்தியது. அதை அதிசயத்துடன் பார்த்த சத்திய விரதன், அதை மீண்டும் நதியிலேயே விட்டான்.

‘‘இந்த நதியில் என்னை ஒரு சிறு பொருளாக நீ பார்க்கிறாய். ஆனால் நான் புகும் பாத்திரத்துக்கு ஏற்ப வளரக்கூடியவன். அதாவது யார் மனது எவ்வளவு விசாலமானதோ அந்த அளவுக்கு நானும் வளர்ந்து அவர்கள் மனதை ஆக்கிரமித்துக் கொள்வேன்,’’ என்று அந்த மீன் பேசியது. ஒருவர் கொள்ளும் பக்தியின் அளவுக்கேற்ப அந்த பக்தியை ஏற்கும் பரந்தாமனும் பிரதிபலன் செய்வான் என்ற உண்மையை உணர்ந்துகொண்டான் மன்னன். இரு கைகளுக்குள் இருந்த சிறு நிலை மாறி, அவனது கமண்டலத்திற்கு புகுந்த மீன் அந்த அளவுக்குப் பெருத்தது. பிறகு பெரிய அண்டாவுக்குள் புகுந்து, மேலும் வளர்ந்து அந்த அண்டாவையே
நிறைத்தது.

அது மேலும் வளரவே, சத்திய விரதன் அதை எடுத்து கூடல் நகரக் குளத்தில் விட்டான். குளமே மறையும் அளவுக்குப் பெருத்து வளர்ந்தது மீன். உடனே அதை எடுத்துப் பெருங்கடலில்விட மன்னன் முயற்சித்தபோது அந்தப் பெரிய மீன் பளிச்சென்று பழைய சிறுமீன் உருகொண்டது. மன்னனும் அதனை வைகை நதியிலேயே விட்டான். இப்போது அந்த மீன் வடிவிலிருந்த மச்சாவதார மூர்த்தி மன்னனுக்கு வாழ்வியல் தத்துவங்களை போதித்தார். அதுமட்டுமல்ல, விரைவில் பிரளயம் நிகழ இருக்கிறது என்றும், அச்சமயம் உலகிற்கு இன்றியமையாத பொருட்களுடன் ஒரு படகில் மன்னன் ஏறிக்கொள்வது என்றும், பிரளய வேகத்தில் படகு கவிழாமல் இருக்கும் பொருட்டு தன் மூக்கால் அதனைத் தான் தாங்கிப் பிடித்துக் கொள்வதாகவும் பரந்தாமன் திருவாய் மலர்ந்தருளினார்.

அதேபோல நடக்கவும், மன்னன், பரம்பொருளின் பேருண்மையை உணர்ந்து கொண்டான். சத்திய வரதனின் வம்சாவளியினரான ஆரிய விரதனின் ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகரில் கடுமையான மழைப் பொழிவால் பேரழிவு நேர இருந்தது. மக்களையும், மாக்களையும் காக்க மன்னன் பெருமாளை நோக்கி மனமுருகி பக்தி செலுத்தினான். நாராயணனும் அவன் மீதும், மதுரை மீதும் பரிவு கொண்டு, நான்கு மேகங்களை அனுப்பி மழை பொழிவைத் தடுத்து நிறுத்தினார். அதாவது, மேகமே மழையை நிறுத்திய இயற்கைக்கு முரண்பட்ட நிகழ்வு! இந்த மேகங்கள் மதுரைக்கு மேலே நான்கு திசைகளிலும் நான்கு மாடங்களைப் போல நின்று மழையைத் தடுத்ததால், இந்நகரம் நான்மாடக்கூடல் என்று பெயர் பெற்றது. இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் வைகை நதியில் நீராடி, தன் கரங்களால் நீரை அர்க்கியம் விட்டான்.

அப்போது அவன் கைக்குள் ஒரு சிறு மீன் கண் சிமிட்டியபடி நீந்திச் சென்றது. அது கண்டு அதிசயித்த மன்னன் தன் நன்றியைப் பரவலாக்கும் விதத்தில் தன் நாட்டின் இலச்சினையாக மீன் உருவை அங்கீகரித்தான். பாண்டியர் என்றாலே மீன் சின்னம் நினைவுக்கு வர, இந்தச் சம்பவமே காரணம் என்பார்கள். ரங்கத்தை காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகள் எவ்வாறு ஒரு மாலையாக அணைத்து கொண்டிருக்கின்றனவோ, அதே போல மதுரையையும் இரு நதிகள் அரவணைக்கின்றன. அவை: வைகை, கிருதமாலா. பகவான் திருவிக்கிரமனாக அவதாரம் எடுத்தபோது, அவரது வலது பாதம் சத்திய லோகம்வரை நீண்டது. திருமாலின் அந்தத் தாமரைப் பாதத்தை, தன் கமண்டலத்து நீரால் பிரம்மன் அபிஷேகித்து வழிபட, அந்த நீர், பூலோகத்தில் இறங்கி, தென் பகுதியில் வைகை, கிருதமாலா என்ற நதிகளாக ஓடின. இந்த நதிகள் ஒரு மாலைபோல மதுரையை அரவணைத்துக் கொண்டு ஓடிய சம்பவத்தைப் பல சங்க இலக்கிய நூல்கள் பதிவு செய்துள்ளன.

இந்த ஆலயம் மூன்றடுக்குக் கோயிலாக விளங்குகிறது. தரைத்தளத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் பெருமாள், மேலே முதல் தளத்தில் சூரிய நாராயணனாகப் புதுமைக் கோலம் காட்டுகிறார். தரைத் தளத்திலேயே இவர் சூரிய ரதத்தில் வீற்றிருக்கும் மாதிரி கல் சிற்பத்தை ஒரு கண்ணாடி தடுப்புக்குள் காணலாம். சூரிய நாராயணரை தரிசித்து விட்டு, அதற்கு மேல் தளத்திற்குச் சென்றால் அங்கே க்ஷீராப்தி நாராயணர் அன்போடு நம்மை எதிர்கொள்கிறார். இந்தப் பாற்கடல் நாயகன் சந்நதியில் அலைஓசை கேட்பதும், பால் மணம் கமழ்வதும் வெறும் பிரமை அல்ல; பக்தி மனதின் அனுபவமே!

க்ஷீராப்தி நாராயணரை தரிசித்துவிட்டு வந்த வழியே திரும்பாமல், இறங்கிச் செல்ல இருக்கும் இன்னொரு படி வழியாக கீழே வரவேண்டும். வெளிப் பிராகாரத்தில் லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாய், பக்தர்களின் பகைவர்களை அழித்து, அவர்களது பகைமை குணத்தை துவம்சம் செய்து, அற்புத நலன்களையும் செல்வங்களையும் வழங்கும் பாதுகாவலராகத் திகழ்கிறார். அருகிலேயே ஆண்டாளுக்குத் தனி சந்நதி. இந்த சந்நதியைச் சுற்றியுள்ள நந்தவனத்தில் நின்ற நிலையில் கிருஷ்ணர் சிலை நவகிரக சந்நதி, வைணவத் தலத்தின் அபூர்வ காட்சி. பொதுவாகவே வேறெந்த திவ்ய தேசத்திலும் நவகிரக சந்நதி இல்லை என்றே சொல்கிறார்கள். இங்குள்ள ஒன்பது கிரகங்களுக்கும் திருமண் சாத்தி, துளசி மாலை இட்டு அலங்கரித்திருக்கிறார்கள்; அர்ச்சனையையும் துளசி தளத்தாலேயே செய்கிறார்கள்.

திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும், மணவாள மாமுனிகளும் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். மதுரையில் பெரியாழ்வாரும் ‘பல்லாண்டு’ பாடி பெருமாளை உச்சி முகர்ந்தார் என்பதால், இந்த கூடலழ கரையும் அவர் அதே பாசுரங்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்றே கொள்ளலாம் என்கிறார்கள் சான்றோர்கள். இவ்வாறே பெரியாழ்வாரைப் புகழ்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்:

“வாழ்விப்பான் எண்ணமோ? வல்வினையில் இன்னம் என்னை
ஆழ்விப்பான் எண்ணமோ? அஃது அறியேன் தாழ்விலாப்
பாடல் அழகார் புதுவைப் பட்டர்பிரான் கொண்டாடும்
கூடல் அழகா, நின் குறிப்பு’’!

அதாவது, ‘குறையில்லாத தமிழ்ப் பாசுரங்களால் பெரியாழ்வார் போற்றிய கூடலழகா, திருக்கூடல் எனும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன் திருவுள்ளம்தான் என்ன? என்னை நல்வாழ்வில் நிலைநிறுத்துவதா அல்லது கொடிய வினைகளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வதா? நான் குழம்புகிறேன்; தெளிவு படுத்துவாயா?’ என்று கேட்டு பெரியாழ்வாரையும் போற்றி வணங்குகிறார் ஐயங்கார்.

எப்படிப் போவது: மதுரை ரயில் நிலையத்திற்கு வெகு அருகிலேயே உள்ள திருக்கோயில் இது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 முதல் மதியம் 12 மணிவரை; மாலை 4 முதல் இரவு 9 மணிவரை. முகவரி: அருள்மிகு கூடலழகப் பெருமாள் ஆண்டாள் திருக்கோயில், பெருமாள் கோயில் மாட வீதி, மதுரை – 625001

தியான ஸ்லோகம்
“ச்ரேஷ்டேஸ்மிந் மதுராபுரே வரகுண வல்லபா பீஷ்டதோ
ஹ்யஷ்டாங்காக்ய விமாந பூஷண மணிஸ் ஸம்வ்யூஹ ஸௌந்தர்யவாந்
ஸ்ரீமத்தேம ஸரோ வரஸ்ய சதடே ப்ராசீம் ஸமாலோகயந்
ஆஸீநோ ப்ருகு யோகி பூஜித பதச்சித்தே ஸதா பாஸதாத்’’

The post திருக்கூடல் கூடலழகர் appeared first on Dinakaran.

Tags : Thirukoodal Kudalazhar ,Meenakshi ,Ambikai ,Madurai ,Thirukoodal ,Thirukoodal Kudalazhakar ,
× RELATED மீனாட்சி அம்மன். உபகோயில்களில் ரூ.1.22 கோடி உண்டியல் வசூல்